×

ஆக்கிரமிப்பு குடியிருப்பு கட்டிடங்கள் அகற்ற எதிர்ப்பு: பூந்தமல்லி அருகே மக்கள் போராட்டம் போலீஸ் குவிப்பு-பதற்றம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர் பிரதான சாலை பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஏராளமான குடியிருப்புகள் கட்டி வசித்து வந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சாலை, மின்சாரம், குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அப்பகுதி மக்களும் வீட்டு வரி உள்பட பல்வேறு வரிகளை செலுத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையே, கோபுரசநல்லூர் பிரதான சாலை பகுதியில் அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள 10க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்பட அனைத்து கட்டிடங்களையும் இடித்து அகற்ற வேண்டும் என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோபுரசநல்லூர் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கட்டிடங்களை, இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, 3 ஜேபிசி இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்தும் அகற்றும் பணிகள் நடைபெற்றன. அப்பகுதியில் குடியிருக்கும் 100க்கும் மேற்பட்ட மக்கள், தங்களின் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனினும், வருவாய்துறை அதிகாரிகள் கட்டிட இடிப்பு பணிகளைத் தொடரவே, அனைத்து மக்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அங்கு நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

காலஅவகாசம் தராமல் வீடுகள் இடிப்பு;இந்த மாற்றத்தையா நாங்கள் கேட்டோம்; மக்கள் வேதனை:
இப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். அதற்குரிய ஆவணங்களையும் வைத்திருக்கிறோம். எனினும், தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வருவாய்துறை அதிகாரிகள் குட்டை புறம்போக்கு என்று கூறி, எங்களின் வீடுகளை இடித்து வருகின்றனர். எங்களின் வீடுகளில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்கு கால அவகாசம் தராமல், வீட்டில் அனைத்து பொருட்களும் இருக்கும்போதே ஜேசிபி மூலம் இடித்து தள்ளுகின்றனர். வருவாய்துறை அதிகாரிகளின் அராஜக போக்கை கண்டிக்கிறோம். இதனால் இப்பகுதியை சேர்ந்த நாங்கள் அனைவரும் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எங்களுக்கு மாற்று இடமும் தரப்படவில்லை. நாங்கள் எங்கே செல்வோம். மாற்றம் வரும் என எதிர்பார்த்துதான் குடும்பத்துடன் தவெகவுக்கு ஓட்டு போட்டோம். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் எங்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டனர். இந்த மாற்றத்தையா நாங்கள் கேட்டோம் என்று வேதனை தெரிவித்தனர்.

Tags : Poonamalli ,Kattupakkam ,Gopurasanallur ,
× RELATED பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு...