சிறுவனை கார் ஏற்றி கொன்ற வழக்கு: 13 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

சென்னை: சென்னையில் நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இஎம்பிஇஇ குழுமத்தின் தலைவர் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மதுபோதையில் தனது சொகுசு காரை ஏற்றினார். இதில் பலத்த காயமடைந்த 12 வயது சிறுவன் முனிராஜ் உயிரிழந்தார்.

மேலும், 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி, ஷாஜி, குமார் ஆகியோர் மீது கொலையாகாத மரணம், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை 13 ஆண்டுகளாக 7-ஆவது, கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகுமார் முன் நடைபெற்று வந்தது. காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் எம்.ஆனந்த் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் ‘மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம். இது மருத்துவரின் சாட்சியம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஷாஜியை குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்க வேண்டும்’ என வாதிட்டனர். இதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் ஷாஜி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது, ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு பிணையில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து அவரை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: