குதிரை பேர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா: ரூ.100 கோடி நில அபகரிப்பு, மணல் கடத்தல் வழக்கில் இருந்து தப்பிக்க தவெகவில் இணைகிறாரா கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 

சென்னை: குதிரை பேர குற்றச்சாட்டுக்கு மத்தியில் அதிமுகவில் விழுந்த 6வது விக்கெட்டாக கரூர் அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் சபாநாயகரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ரூ.100 கோடி நிலஅபகரிப்பு, மணல் கடத்தல் உட்பட 31 வழக்கில் இருந்து தப்பிக்கொள்ள அவர் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு வந்தது முதல் தினந்தோறும் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு எதிராக முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ், 25 எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்புகளை பறித்து உத்தரவிட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அன்றைய தினமே தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அடுத்தாக விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார்.

இவர், நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக 5 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று காலை 10.48 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவர், 10.50 மணிக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, 11.14 மணிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை மறுநாள் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் விழாவில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தான், அவர் தவெகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் அருகே வெள்ளியணையை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் அவர் திமுக ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த மோசடி வழக்கில் அவரை எப்ப வேண்டும் என்றாலும் சிபிசிஐடி போலீசார் கைது செய்யலாம். அதேபோல், தேர்தல் நேரத்தில் கரூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்றுமணலை கடத்துவதாக தனது ஆதரவாளர்களுடன் மணல் கடத்திய வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டார். அது குறித்து விசாரணை நடத்திய போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டவிரோதமாக பல நூறு யூனிட் மணலை அவரது வீட்டின் அருகே பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின்படி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கரூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக வந்த புகாரின்படி தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலரின் காரை எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தாக தாந்தோணிமலை போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு, மணல் கடத்தி பதுக்கியது உள்பட 31 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்த போது, எம்.ஆர்.விஜயபாஸ்கரே ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். எனவே திமுக ஆட்சியில் கூட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால், தவெக அரசு அமைந்த உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போது எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்களை தங்களது கட்சியில் இணையும் வகையில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதுள்ள ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க பெரிய அளவில் பேரம் பேசப்பட்டு வருவதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது கரூர் தொகுதி எம்எல்ஏவான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக சார்பில் மீண்டும் அதே தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்துள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்குகளை காட்டித்தான் தவெக மிரட்டியால் அவர் அக்கட்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது பாஜதான் வழக்குகள் இருப்பவர்களை மிரட்டி கட்சியில் சேர்த்து வந்தது. தற்போது அதேபோல நேர்மையான ஆட்சி தருவோம் என்று வாக்குறுதி அளித்த விஜய், தற்போது ஊழல் வழக்குகள் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* விரைவில் 7 தொகுதிக்கு இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள 6 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை தவிர்த்து, ஏனைய 5 தொகுதிகளிலும் அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் காலியானது. இந்நிலையில், மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால் விரைவில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியேறியதன் மூலம் சட்டசபையில் அக்கட்சி எம்எல்ஏக்களின் பலம் 47ல் இருந்து 41ஆக குறைந்துள்ளது. இப்படி, ஒவ்வொரு எம்எல்ஏவாக அதிமுகவை விட்டு வெளியேறுவது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டுமின்றி, அதிமுகவினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

* ராஜினாமா கடித நகல் வழங்க அதிமுக கோரிக்கை

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து முக்கியமான கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 6 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள விளக்கக் கடிதங்களின் நகல்களை வழங்குமாறு வலியுறுத்தினர். தகுதி நீக்க விவகாரம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையுடனும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தகுதி நீக்க நடவடிக்கையின் தற்போதைய நிலை, உறுப்பினர்கள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் அதை தொடர்ந்து சபாநாயகர் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: