மதுரை: ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல் நிலைத் தேர்வை தமிழில் நடத்தக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான குடிமைப் பணி தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் முதல் நிலை தேர்வு கொள்குறி வகையில் தான் இருக்கும். இதற்கான குடிமைப் பணித் தேர்வை தமிழில் நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் இதை போன்ற கோரிக்கையுடன் ஏற்கனவே நிலுவையிலுள்ள மனுவுடன் சேர்த்து பட்டியலிடுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
