×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2ம் கட்ட தலைவர்கள் திமுகவில் சேர்ந்தனர்: மதிமுக கூடாரம் காலியாகிறது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுக 2ம் கட்ட தலைவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர். அடுத்தடுத்து பலரும் வெளியேறுவதால் மதிமுக கூடாரம் காலியாவதையடுத்து வைகோ கடும் அதிர்ச்சிடைந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகள் வேண்டும் என்பதால், திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசை அமைத்துள்ளது. தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தாலும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று கூறி வந்தனர். இதற்கிடையே, ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை தவெக அரசு கொடுத்துள்ளது.

இதனால் ஆதரவு கொடுத்த கட்சிகள் தற்போது தவெக அரசிலும் பங்கேற்று இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன. இந்தச் சூழலில், அடுத்ததாக மதிமுகவும் அதே அரசியல் திசையை நோக்கி நகரும் அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு ஏற்றவாறு திருச்சி வந்த முதல்வர் விஜய்யை, துரை வைகோ நேரில் சென்று வரவேற்றது அக்கட்சியினர் மத்தியில் பேசும் பொருளானது. மேலும், முதல்வர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் நேரில் சந்தித்து பேசியதும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. எனவே திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் தவெக கூட்டணியில் மதிமுக இடம்பெறப் போகிறது என்ற பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (கடையநல்லூர்), செந்தில் செல்வன் (சீர்காழி) ஆகியோர் அழைக்கப்பட்டனர். இதில் கடையநல்லூர் ராஜேந்திரன் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டார். செந்தில் செல்வன் எம்எல்ஏ இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே அவர் திமுகவில் இணைய இருப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதற்கிடையே, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதோடு 2 எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து தேர்தலை சந்திக்க வைகோ முயன்று வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இரண்டு மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதோடு, அதன் மூலம் நடக்கக்கூடிய இடைத்தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் மூத்த உறுப்பினராக வைகோவை நிறுத்தி வெற்றி பெற வைக்கிறோம் என்று தவெக தரப்பில் இருந்து உறுதி அளித்துள்ளனர்.

வைகோ வெற்றி பெற்ற உடன் அமைச்சர் பதவி வழங்கி, செல்வம் கொழிக்கக்கூடிய முக்கிய இலாகாக்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்குவதாகவும் ஆதவ் தரப்பில் இருந்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக அளித்துள்ள ஆசையில் மயங்கிய துரை வைகோ இரண்டு எம்எல்ஏக்களையும் பொதுக்குழுவுக்கு அழைத்து வருகிறேன் என்று சவால் விட்டு சென்றிருக்கிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரனும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டார். எம்எல்ஏக்கள் இருவரும் பொதுக்குழுவுக்கு வராததால், சவால் விட்டு சென்ற துரை வைகோவும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வது என்று பொதுக்குழுவை அவரும் புறக்கணித்தார்.

இந்த நிலையில் மதிமுக எம்எல்ஏ செந்தில் செல்வன் மதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிவிட்டதாக அதிரடியாக அறிவித்தார். தான் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் திமுக சட்டமன்ற உறுப்பினராகவே தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இது வைகோ தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதிமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏ செந்தில் செல்வன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. அவர் எந்த நேரத்திலும் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், பொடாவில் வைகோவுடன் 19 மாதங்கள் சிறையில் இருந்த அழகு சுந்தரம், மதிமுகவின் தொடக்க காலம் முதல் வைகோவுடன் நெருக்கமாக இருந்தவரும் சிவகங்கை மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய வருமான செவ்வந்தியப்பன், மதிமுகவின் முன்னாள் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக இருந்த டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும் பல்லடம் நர்மதா இளங்கோவன், மாநில மாணவரணி துணை செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொது செயலாளர் கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகளாக இருந்தவர்கள் ெவளியேறி வருவது மதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பலர் மதிமுகவில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். இதனால் மதிமுக கூடாரம் காலியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வைகோ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Tags : Dimuka Dhawar Mu. K. ,Stalin ,Chennai ,Dimuka Talawar Mu. K. ,VAIKO ,Tamil Nadu Assembly elections ,Daveka ,
× RELATED ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல்...