×

6 மாநில விவசாயிகளுக்கு ‘விதை பாதுகாவலர்’ விருதுகள்; வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் வழங்கினார்

 

வேலூர்: சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில், ‘பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம்’ இன்று (28/06/2026) நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 9 முன்னோடி விவசாயிகளுக்கு, ‘விதை பாதுகாவலர் விருதுகள் – 2026’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் இவ்விருதுகளை வழங்கினார்.

இவ்விழாவில் சோழ மண்டல நிதி நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவர் நரேந்திர குமார், கலைமாமணி, மரபின் மைந்தன் முத்தையா மற்றும் வி.ஐ.டி விவசாய கண்டுபிடிப்புகள் பள்ளியின் துறைத்தலைவர் ஆர். ராஜேந்திரன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இந்த விழாவில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் பேசுகையில் “விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. கல்விப்பணி, ஐடி துறையில் இருப்பவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை இருக்கிறது. ஆனால், 24 மணி நேரமும் எந்தவித விடுப்பும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்வது விவசாயிகள்தான். நாம் எப்போதும் ஒரே பயிரை நம்பி இருக்காமல், அந்தந்தக் காலத்திற்கும் நம்முடைய மண்ணிற்கும் ஏற்ற பயிர்களைப் ‘பயிர் சுழற்சி முறையில்’ பயிரிட வேண்டும்.” எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், “மண் காப்போம் இயக்கம் மூலம் பல்வேறு தலைப்புகளில் வேளாண் கருத்தரங்குகளை நடத்துகிறோம். இதன் முக்கிய நோக்கம் விவசாயிகள் பொருளாதார தன்னிறைவுடன் தற்சார்பு நிலையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.

மக்கள் தற்போதைய சூழலில் உணவின் அளவை விட அதன் தரத்தை பார்க்கின்றனர். ஆகையால், தரமான விதைகளைத் தரவும், அதனைப் பயன்படுத்தி எவ்வாறு தரமான விளைபொருட்களை விளைவிப்பது என்பது குறித்தும் தங்கள் வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விவசாயிகளும், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள விஞ்ஞானிகளும், சந்தை நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள தொழில்முறை வல்லுநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்” எனக் கூறினார்.

சிறப்புரையாற்றிய மரபின் மைந்தன் முத்தையா பேசுகையில், “மண் என்பது நாம் மிதித்து நடந்து செல்வது அல்ல, மதித்து நடக்க வேண்டியது என்ற விழிப்புணர்வை உலகளவில் சத்குருவின் மண் காப்போம் இயக்க விழிப்புணர்வு பயணம் ஏற்படுத்தியுள்ளது. சமூகப் பொறுப்புள்ள விவசாயி எவ்வாறு தரமான விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கிறாரோ, அதுபோல நாம் தரமான மாணவர்களை உருவாக்கித் தர வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருப்பார். ஆகையால்தான், தரமான பாரம்பரிய விதைகளை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்க்க ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் நடத்தும் இவ்விழா, தரமான மாணவர்களை உருவாக்கும் வி.ஐ.டி வளாகத்தில் நடைபெறுவது மிகப்பொருத்தமானது.” எனக் குறிப்பிட்டார்.

விதை பாதுகாவலர் விருதுகள்; தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிக் கொண்டே, பாரம்பரிய விதைகளை சேகரித்து பரவலாக்கம் செய்து வரும் மோகன் மற்றும் யுவராஜ் ஆகியோருக்கும், முன்னோடி விவசாயிகளான சேலத்தைச் சேர்ந்த சரவணன், ஹரியானாவைச் சேர்ந்த லாலு ராஜேஷ் குஹார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனில் கவாலி, குஜராத்தைச் சேர்ந்த ஹமீர்பாய் பைரயா, கேரளாவைச் சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் முகமது நாசிர் பாப் புட்டி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தூல் குமார் ரெட்டி ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 9 முன்னோடி விதை பாதுகாவலர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த விதை பாதுகாவலர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்த ‘விதைத்தீவு’ பிரியா ராஜநாராயணனுக்கு மண் காப்போம் இயக்கம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

இக்கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் செலவைக் குறைத்து லாபம் ஈட்டும் வழிகள் குறித்துப் பல நிபுணர்கள் பேசினர். மத்திய அரசு அதிகாரி நீ. செல்வம் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான இயற்கை தீர்வுகள் குறித்தும், தான்யம் ஆர்கானிக்ஸ் கே. மதுசூதனன் இயற்கை விளைபொருட்களைச் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டும் முறைகள் குறித்தும் விளக்கினர்.

தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் முனைவர் வி. சங்கர் மற்றும் முனைவர் எஸ். புவனேஸ்வரி ஆகியோர் நவீன காய்கறி சாகுபடி, பேக்கேஜிங் மற்றும் மதிப்புக்கூட்டல் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினர். மேலும், முனைவர் அகரம் அப்துல் கலாம் காய்கறி, கீரைகளின் மருத்துவ குணங்கள் குறித்தும், சென்னை மைத்ரேயன் எளிய முறையில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும் வழிகாட்டினர்.

அதேபோன்று முன்னாள் ஐடி ஊழியரான விவசாயி ஜனா சிவதாணு கீரை சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டிய தனது வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொண்டார். வேலூர் பிரதீப் குமார் மற்றும் ஈரோடு சௌமியா ஆகியோர் பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்துப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கினர். இவர்களுடன் 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்து அதிக விளைச்சல் பெறும் முறைகளை ராணிப்பேட்டை மணிகண்டனும், தான் மீட்டெடுத்த 90-க்கும் மேற்பட்ட அரிய கிழங்கு ரகங்களின் சாகுபடி முறைகளை வேலூர் யுவராஜும் விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

இவ்விழாவின் மற்றொரு முக்கிய அம்சமான 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட பிரம்மாண்டக் கண்காட்சி அமைந்திருந்தது. இதில் நாட்டின் பல்வேறு மாநில விதை பாதுகாவலர்கள் மூலம் 2000-க்கும் மேற்பட்ட அரிய பாரம்பரிய விதை ரகங்கள், கிழங்கு வகைகள் மற்றும் இயற்கை விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

 

Tags : VIT ,Vice President ,Shankar Viswanathan ,Vellore ,Sadhguru ,Man Kaapom ,Indian Traditional Vegetable and Seed Festival and Seminar ,VIT University ,
× RELATED சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து