சென்னை: திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற பருப்பு கொள்முதல் முறைகேட்டில் ஈடுபட்ட இணை பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் (டியுசிஎஸ்) மூலம் ஒவ்வொரு மாதமும் து. பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு கடந்த மே மாதம் 10,025 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.127க்கு விலைப்புள்ளி இறுதி செய்யப்பட்டது. இந்த பருப்பு வெளிமார்க்கெட்டில் ரூ.85க்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்த துவரம் பருப்பை தான் ரூ.127க்கு டியுசிஎஸ் இணை பதிவாளர் தேவிபிரியா கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளார். டெண்டர் வழங்கப்பட்ட 15 முதல் 20 நாளில் சம்பந்தப்பட்ட கிடங்குகளுக்கு அந்த நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும். ஆனால், மே மாதத்திற்கு பதில் ஜூன் மாதம்தான் து.பருப்பு சப்ளை செய்யப்பட்டது. இந்த ஒரு மாதத்தில் பருப்பின் விலை ரூ.114 மட்டுமே.
இதன்மூலம் ஒரு கிலோ பருப்பு விலை ரூ.13 குறைந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.1.56 லட்சம் நஷ்டம். இதுகுறித்து டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன் கூட்டுறவு துறை செயலாளர் அமுதா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா ஆகியோரிடம் புகார் மனு அனுப்பி இருந்தார். இதுபற்றிய செய்தி தினகரனில் கடந்த 25ம் தேதி வெளியானது.
இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டு டியுசிஎஸ் இணை பதிவாளர் கடந்த 25ம் தேதி மாலையே அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் லதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: இடைக்கால விசாரணை அறிக்கையின் அடிப்படையில் டியுசிஎஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் இணை பதிவாளர் கே.தேவிப்பிரியா பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் எஸ்.பாபு டியுசிஎஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் இணை பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். உடனடியாக அவர் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து டியுசிஎஸ் தொமுச நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
