புதுடெல்லி: ‘மாணவர்களுக்கான குரல்’ பிரசார இயக்கத்துக்கு முழு ஆதரவை அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்திய இளைஞர்கள் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தொடர் மறு தேர்வுகள், பணியாளர் நியமனத்தில் தாமதம், காலியாக உள்ள அரசுப் பணிகள், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, அதிகரிக்கும் கல்விச் செலவு ஆகியவை நமது இந்திய இளைஞர்களையும் அவர்களின் குடும்பங்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த ஒடுக்குமுறையில் இருந்து நமது இளைஞர்களை விடுவிக்க ஒரு புதிய அமைப்புக்கான அடித்தளத்தை அமைக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
