×

14.2 கிலோ தங்கக் கடத்தல் விவகாரம்; நடிகையை ஆபாசமாக பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு எச்சரிக்கை: கர்நாடக ஐகோர்ட் அதிரடி

பெங்களூரு: கன்னட நடிகை குறித்து அவதூறாகப் பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம், கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கன்னட நடிகை ரண்யா ராவ் 14.2 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ பசன்கவுடா பாட்டீல் யத்னால், அந்த நடிகையின் உடல் பாகங்களைக் குறிப்பிட்டு மிகவும் ஆபாசமாகவும், பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் அருவருக்கத்தக்க கருத்துகளைத் தெரிவித்தார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி யத்னால் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி எம்.நாகபிரசன்னா, பாஜக எம்எல்ஏவை கடுமையாகச் சாடினார். அவர் கூறுகையில், ‘மன்னிப்பு கேட்பதால் மட்டும் ஒரு பெண்ணைப் பற்றி பேசிய அந்த அருவருப்பான வார்த்தைகளைத் துடைத்துவிட முடியாது. வட கர்நாடக வட்டார மொழி என்ற பெயரில் இத்தகைய தரக்குறைவான ஆபாசப் பேச்சுகளை ஒரு மக்கள் பிரதிநிதி நியாயப்படுத்த முடியாது’ என்று தெரிவித்தார். தனது நாகரீகமற்ற செயல் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று எம்எல்ஏ யத்னாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை வழக்கை ஒத்திவைத்தார்.

Tags : BJP ,Karnataka High Court ,Bengaluru ,BJP MLA ,Ranya Rao ,Karnataka ,
× RELATED டோல்கேட்டில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய LPG டேங்கர் லாரி