லக்னோ: வாரிசு அரசியலை விமர்சிக்கும் பாஜக தற்போது உத்தரபிரதேசத்தில் தனது கொள்கையைத் தளர்த்தி புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பலம் 62 இடங்களிலிருந்து 33 இடங்களாக அதிரடியாகக் குறைந்தது. எதிர்க்கட்சிகளின் சமூக நீதி முழக்கத்தால் பலத்த அடி வாங்கிய பாஜக, வரும் 2027ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநில நிர்வாகிகள் குழுவை தற்போது மாற்றியமைத்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தற்போது 48 பேர் கொண்ட புதிய குழுவை அறிவித்துள்ளார். பழைய குழுவில் 43 பேர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 19 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் மற்றும் 19 செயலாளர்கள் எனப் பட்டியல் நீண்டுள்ளது. வாரிசு அரசியலை மேடைதோறும் கடுமையாக விமர்சித்து வரும் பாஜக தலைமை, தற்போது தனது இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூத்த மகன் பங்கஜ் சிங் ஏற்கனவே எம்எல்ஏ-வாக உள்ள நிலையில், தற்போது அவரது இளைய மகன் நீரஜ் சிங்கிற்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பாஜகவின் வாரிசு எதிர்ப்பு பேச்சுகள் வெறும் கண்துடைப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், ஜாதி ரீதியான வாக்குகளைக் கவர 20 ஓபிசி மற்றும் 6 எஸ்சி நிர்வாகிகளை நியமித்து 58 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. பிராமணர், தாக்குர் உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கு 42 சதவீத பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டாலும், வாரிசுகளுக்குப் பதவி வழங்குவதில் காட்டிய ஆர்வம் அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
