கராகஸ்: வெனிசுலா நாட்டின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று மாலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நடந்தன. முதலில் 7.2 ரிக்டர் அளவில் சான் பெலிப் அருகே நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து வெறும் 39 விநாடிகளில் 7.5 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் தாக்கியது. 1900ம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தலைநகர் கராகஸ் மற்றும் துறைமுக நகரமான லா குவைரா உள்ளிட்ட பல பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன.
இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 40,000 பேர் காணாமல் போயுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். கல்கரியில் வசிக்கும் அந்நாட்டு மக்கள் தங்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த நிலையில், தற்போது நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டில் அவசர நிலையை அறிவித்து மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். சிமோன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையான சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான உதவிகள் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பல மாநிலங்களில் மின்சாரம் மற்றும் செல்போன் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் உதவிக் கரம் நீட்டி உள்ளன. மீட்பு பணிகளுக்காக சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனம் செல்போன் மற்றும் இணைய சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்குகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி இரவு பகலாகத் நடந்து வருகிறது.
‘மிராக்கிள்’ பச்சிளம் குழந்தை;
வெனிசுலாவின் லா குவைரா பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று காயமின்றி உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு மீட்புக் குழுவினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் 12 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். ஒரு நாய் இடிபாடுகளுக்குள் உயிருடன் மீட்கப்பட்டு அதற்கு தண்ணீர் புகட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒரு தாய் தனது குழந்தையை மீண்டும் சந்தித்த உருக்கமான காட்சியும் பதிவாகியுள்ளது.
