×

தர்மபுரி அருகே அக்கா, தம்பி கழுத்தறுத்து படுகொலை

நல்லம்பள்ளி: தர்மபுரி அருகே அக்கா, தம்பி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டனரா என 2 பெண்கள் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தகடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (45), லாரி டிரைவர். இவருக்கு நாகம்மாள் (50), நஞ்சம்மாள் (47) என்ற சகோதரிகள் உள்ளனர். நாகம்மாளின் மகள் கீதாவை (38) மாதேஷ் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நஞ்சம்மாள் கணவரை பிரிந்து 20 வருடங்களாக தனியே வசித்து வந்தார். இந்நிலையில் மாதேஷின் மனைவி கீதா, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு இரண்டு தெரு தள்ளி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால், மாதேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்து வந்தார். மேலும், குடும்பத்தில் நிலம் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இதனிடையே, அளவுக்கதிகமாக மது குடித்ததால், மாதேசுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை நஞ்சம்மாள் மருத்துவ செலவு செய்து காப்பாற்றினார். இதனையடுத்து, மாதேஷ் தனது வீட்டின் அருகில் உள்ள சுமார் 10 சென்ட் நிலத்தை, அக்கா நஞ்சம்மாள் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவரது மனைவி கீதா மற்றும் அக்கா நாகம்மாள் ஆகியோர், மாதேசுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நஞ்சம்மாள் தங்கியிருந்த வீட்டின் வெளியே மாதேசும், நஞ்சம்மாளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொலையான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் நாகம்மாளும், கீதாவும் சேர்ந்து, மாதேஷ் மற்றும் நஞ்சம்மாளை கழுத்தை அறுத்து கொன்றார்களா என்ற சந்தேகத்தின் பேரில், கீதா மற்றும் நாகம்மாள் உட்பட 5 பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Aka ,Dharmapuri ,Nallampalli ,Dharmapuri District ,A. Jetialli ,
× RELATED தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு எய்ட்ஸ்...