டெல்லி: கலப்பு பெட்ரோல் பயன்பாடு வாகன காப்பீட்டை பாதிக்காது என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்து உள்ளது. 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களின் காப்பீடு ரத்தாகும் என்றும், எரிபொருள் எஞ்சினுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட (E20) பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனத்தின் காப்பீடு அல்லது அதன் இன்சூரன்ஸ் கிளைம் (Insurance Claim) பாதிக்கப்படாது என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) பயன்படுத்துவதால் இன்சூரன்ஸ் செல்லாது என்பது முற்றிலும் ஆதாரமற்ற வதந்தியாகும். மேலும் இந்த எரிபொருளால் வாகன எஞ்சின்கள் பாதிக்கப்படுவதாக எந்தவித அறிவியல் பூர்வமான தகவலும் இல்லை. அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் போன்ற பல நாடுகளில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
