விசித்திரமான யோகங்கள் அருளும் விசித்திரா யோகினி

அம்பிகைக்கு சேவகம் செய்யும் பல வகை யோகினிகளில் இந்த யோகினி சற்றே விசித்திரமானவள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த யோகினி அழகும், மென்மையும் நிரம்பியவள். கூர்மையான அலகினைக் கொண்ட அழகான பறவையின் முகம் கொண்டவள்.

பக்ஷி துர்கையும் விசித்ரா யோகினியும்

பக்தர்களை அரணாக இருந்து காப்பதால், அம்பிகைக்கு, துர்கை என்று பெயர். இந்த துர்காதேவிக்கு பல விதமான வடிவங்கள், ஆகமங்களிலும் தந்திர சாஸ்திர நூலிலும் ல்லப்பட்டிருக்கிறது. அதில், மிக ரகசியமான ஒரு வடிவம்தான் “பக்ஷிதுர்கா’’ என்ற வடிவம். உருண்டையான வெளியில் தெரியும்படியான சிவந்த நெருப்பு ஜ்வாலையைக் கக்குகின்றதாயுள்ள நான்கு கண்களையுடையவள், இந்த துர்காதேவி. மேடு பள்ளமுள்ள அகன்ற கூர்மையான அலகு உடையவள். இறக்கையினின்று வீசும் பெருங்காற்றினால் சத்ருக்களை விரட்டியடிப்பவள். அதே போல், தசமஹா வித்யைகள் வரிசையில் பகலாமுகி என்று ஒரு தேவி உண்டு. இவள் அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்பவள். பிரம்மாஸ்திரத்தின் சக்தியே இவள்தான்.

இந்த தேவி, தமிழகத்தில் இயல்பாகவே காட்சி தந்தாலும், வட நாட்டில் பல இடங்களில் பறவையின் முகத்தோடு காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. அதுவும், குறிப்பாக கொக்கின் முகத்தோடு காட்சி தருகிறாள் என்று சொல்லப்படுகிறது. பகலா என்றால் கொக்கு, முகி என்றால் முகம் உடையவள் என்று பொருள். ஆகவே இந்த தேவியை கொக்கின் முகத்தோடு வர்ணிப்பது ஒரு விதத்தில் சரி என்றே தோன்றுகிறது. இப்படி அம்பிகை பல இடங்களில் பறவையின் வடிவில் காட்சி தருகிறாள். அவளது சேவகிகளும் பறவையின் வடிவில் காட்சி தருவது ஆச்சரியம் இல்லை தானே?

வண்ணங்களும் யோகினியும்

இவள் உலகத்தில் உள்ள பலவண்ணங் களின் வடிவமாக விளங்குபவள். சூரிய ஒளி ஒன்றேயான வெண்மை நிறத்தில் இருக்கிறது. ஆனால், அதற்குள் ஏழு வண்ணங்கள் இருக்கிறது என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறங்களின் கலவையே சூரிய ஒளி. இதை குறிப்பது போலவே, நமது இந்து சமயத்தில் சூரியனின் ரதத்துக்கு ஏழு குதிரைகள் என்றும், ஏழு குதிரைகளும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதாகவும் சொல்கிறோம். இப்படி ஒன்றாக இருக்கும் சூரிய ஒளி, பலவாக பலவண்ணங்களாக பிரிவது போல, ஒன்றான பரம்பொருள் பலவாக பிரிந்து இந்த உலகம் என்னும் நாடகத்தை நடத்துகிறது. இந்த ஆன்மிக பக்குவ ஞானத்தையும் அடியவர்களுக்கு கொடுப்பவள் இந்த யோகினி என்பதால், இந்த யோகினி பலவண்ணங்களின் வடிவில் இருப்பதாக சொல்லலாம். இந்த யோகினி, தன்னை வழிபாடு செய்யும் யோகிக்கு ஆழ்ந்த அமைதியோடு கூடிய பேரின்பத்தை வழங்குகிறாள்.

யோகினிகளுக்கு மிருகத்தலை ஏன்?

மிருகத்தின் தலை மற்றும் பறவைகளின் தலையைப் பெற்ற யோகினிகள் அனைவருமே ஒரு விஷயத்தை யோகத்தில் ஈடுபடும் பக்தர்களுக்கு உறுதியாகத் தெரிவிக்கிறார்கள். உயர்ந்தது தாழ்ந்தது என்றோ, நல்லது கெட்டது என்றோ இருமைக்குள் சிக்கி உழன்றால் பரம்பொருளைத் தெரிந்து கொள்ள முடியாது. அனைத்துமாக இருப்பது இறைவனே என்று உணர்வதுதான் ஞானநிலை. மனிதன், தன்னை என்ன செய்துவிடப் போகிறான் என்று இறுமாந்து இருந்த ராவணன் மாண்டான். ஒரு பெண், தன்னை என்ன செய்துவிடப் போகிறாள் என்று நினைத்த மகிஷனும் மாண்டு போனான். அனைத்திலும் இறைவனின் வடிவை காணும் யோகிகள் சிரஞ்சீவிகளாக வாழ்கிறார்கள். யாதுமாகி நின்றாய் காளி, என்று உள்ளம் உருகி அம்மையை சரண் புகும் பக்குவத்தை, இந்த யோகினிகள் நமக்கு கொடுக்கவே இந்த ரூபங்கள் கொண்டு இருக்கிறார்கள்.

இதைச் சுட்டிக் காட்டும் விதமாகவே, அவர்கள் பிறப்பினால் உயர்ந்த மனித உடலையும், ஐந்தறிவு கொண்ட மிருகம் மற்றும் பறவைகளின் தலையையும் கொண்டு தரிசனம் தருகிறார்கள். உயர்ந்ததும் தாழ்ந்ததும் எங்காவது ஒரு புள்ளியில் இணைந்தால்தான் யோகம் கைகூடும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். உயர்ந்த பரமாத்மாவும், தாழ்ந்த ஜீவாத்மாவும் இணையும் அந்த இணைப்பை காட்டவே, மனித உடலும், மிருகத்தலையோடும் யோகினிகள் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.தெய்வ நிலையை அடைய வேண்டுமானால், அவன் மனித நிலையில் இருப்பது அவசியம்.

ஆயிரம் ஆயிரம் உயிர்கள் இந்த உலகில் இருந்தாலும், கர்மம், பக்தி, யோக சாதனை, ஞான மார்க்கம் இப்படி பலவற்றை கடைப்பிடிக்கும் உயர்ந்த ஒரு வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது என்றால் அது மிகையில்லை. இந்த மனித நிலையில் இருந்து, நேம நிஷ்டையோடு இறைவனை பணிந்தால்தான் முக்தி என்பது கிடைக்கும். இதனால்தான் ஆதிசங்கரர், “நர ஜன்மம் துர்லாபம்’’ என்கிறார். ஔவையார், “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’’ என்கிறார். இப்படி மனித பிறப்பின் முக்கியத்துவத்தை காட்டவே யோகினிகள் மனித வடிவில் காட்சி தருகிறார்கள்.

மார்புக்கு அருகில் தாமரை ஏன்?

இந்த யோகினி, தன் கரத்தில் ஒரு மலரை ஏந்தி, அதைத் தன் மார்புக்கு எதிரே நீட்டிப் பிடித்த வண்ணம் அழகாக அமர்ந்திருக்கிறாள். உபநிஷத்களில், நாபிக்கு ஒரு அங்குலம் மேல், கீழ் நோக்கிய தாமரை வடிவில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. இங்குதான் மனிதனுடைய ஆன்மா இருக்கிறது அல்லது இறைவன் வசிக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இதை இதயகமலம் என்றும், தகராகாசம் என்றும் சொல்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும், சிதம்பர ரகசிய அறை, இந்த இதய கமலத்தில் இருக்கும் இறைவனை உணர வேண்டும் என்ற கருத்தைதான் சூசகமாக சொல்வதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்ப அம்பிகையின் உபாசகர், தங்கள் இதய கமலத்தில் இருக்கும் ஆன்ம வடிவில் அம்பிகையை உணரும் ஞானத்தை இந்த தேவி கொடுக்கிறாள் என்பதை காட்டவே, மார்புக்கு நேரே ஒரு மலர்ந்த தாமரையை வைத்திருக்கிறாள்.

யோகச் சக்கரங்களில் அனாகதச் சக்கரம் இதயத்தோடு தொடர்புடையது. இந்த அநாகத சக்கரத்தை கடக்க யோகிகளுக்கு உதவுபவள் இந்த யோகினி. இதை உணர்த்தவே இந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அதே போல, மனதை மலரைப் போல லேசாகவும், மென்மையாகவும் வைத்துக் கொண்டால், இறைவனை அடைவது எளிது என்று இதன் மூலமாக அவள் தன் பக்தர்களுக்குத் தெரிவிக்கிறாள்.

மடியில் குருவி ஏன்?

மேலும், இந்த யோகினி தன்னுடைய இடது கரத்தை விரித்து உள்ளங்கையில் அழகான சிறிய பறவை எந்தவித பயமும் படபடப்பும் இல்லாமல், இவளது இடது தொடை மீது அமர்ந்திருக்கிறது. உரையாற்று உணர்வற்று கிடக்கும் யோக நிலையை இது குறிக்கிறது. இந்த யோக நிலையைத் தானே, “சொல்லற சும்மா இரு’’ என்று கந்தன், அருணகிரிக்கு உபதேசம் செய்து அருளினான்?
சிறிய ஓசையோ, அச்சமோ இல்லாத இடத்தில்தான் ஒரு குருவி அமைதியாக வந்து அமர முடியும். ஒரு சிந்தனையும், உணர்வும், இல்லாமல் மனது நிச்சலாமாகும் போது, அங்கே இறைவன் வந்து அமர்கிறான். இதை உணர்த்தும் விதமாக இந்த யோகினியின் மடியில் ஒரு குருவி அமர்ந்திருக்கிறது.

ஜி.மகேஷ்

Related Stories: