ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதால், கிராம மக்கள் தண்ணீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது, 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 யூனியன்களில் உள்ள 429 பஞ்சாயத்துகளுக்கு முறையாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
நீண்ட தொலைவிலுள்ள கிராமங்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாளுக்கு ஒருமுறை என சீரான குடி தண்ணீர் விநியோகம் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக முறையான பராமரிப்பின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது.
பிரதான குழாய் செல்லும் சாலை மார்க்கமாக உள்ள ஊர்கள் தவிர்த்து நூற்றுக்கணக்கான சிறிய, குக்கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாததால் அப்பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனால் டேங்கரில் விற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கியும், காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசியும் தண்ணீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து அள்ளியும், தள்ளு வண்டிகளில் குடத்தை வைத்து தள்ளி வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் தள்ளுவண்டி வீட்டின் ஒரு அத்திவாசிய பொருளாகி போனது.
இது குறித்து கிராம பகுதி பெண்கள் கூறியதாவது: கிராமங்களில் தண்ணீர் தட்டுபாடு நிலவி வருவதால், தண்ணீரின்றி சாலையோரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசியும் தண்ணீரை பிடிப்பதற்கு பகல், இரவாக காத்து கிடந்து அள்ளி வருகிறோம்.
பிரதான சாலை மார்க்கம் அல்லாத கிராம பகுதிக்கு வாரம் இருமுறை மட்டுமே காவரி கூட்டு குடி தண்ணீர் வருவதாலும் ஒட்டு தண்ணீர் அள்ளுவதாலும் ஒவ்வொரு குடமாக பிடித்து, தலைசுமையாக கொண்டு சென்று வருவதற்குள் தண்ணீர் கிடைக்காது நிலை ஏற்படும்.
இதனால் 5 குடங்களில் தண்ணீர் அள்ளி, தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளி செல்லும் நிலை உள்ளது. இதனால் தள்ளுவண்டி வீட்டின் ஒரு பொருளாக ஆகிவிட்டது. வறட்சியால் விவசாயம் பொய்த்து போன நிலையில் விலைகொடுத்து வாங்க வழியின்றி கடன் வாங்கி, இந்த வண்டியை வாங்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் திருமண விழா சீர்வரிசையில் இடம்பெறும் பொருளாகவும் தள்ளுவண்டி மாறியுள்ளது என்றனர்.
சாயல்குடியை சேர்ந்த தள்ளுவண்டி உற்பத்தியாளர்கள் கூறும்போது, மாவட்டங்களில் உள்ள லேத்களில், கடந்த ஒரு மாதத்தில் அதிக விற்பனையாகும் ஒரு பொருளாக தண்ணீர் தள்ளுவண்டி உள்ளது. ஒரு வண்டி ரூ.4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மாதத்திற்கு 40 முதல் 50 வண்டிகள் வரை விற்பனையாகிறது என்றனர்.
திமுக திட்டம் என்பதால் முடக்கும் அபாயம்
மாவட்டத்தில் பின்தங்கிய முதுகுளத்துார் பகுதியில் 1999ல் ரூ.40 கோடியில் நரிப்பையூர், கடல்நீரை நன்னீராக்கும் குடிநீர் திட்டம், 2010ல் ரூ.616 கோடியில் காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், 2023ல் ரூ.555 கோடியில் மறுசீரமைப்பு, கடந்த 2024-25ல் ரூ.2,819.78 கோடியில் கரூர், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் (இதில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் வெற்றி) என திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருவதால் இத்திட்டம் முழுமடையாமல், விரைந்து தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது.
கடந்தமுறை 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நரிப்பையூர் குடிநீர் திட்டம் முடக்கப்பட்டது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முறையாக பராமரிக்காமல் முடங்கியது. அதேபோன்று தற்போது தவெக அரசும் மாவட்டத்தில் திமுக அரசால் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டத்தை முடக்கும் நோக்கில் முறையாக பராமரிக்காததால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
