வேட்டைக்கு சென்றவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

 

சேலம், ஜூன் 25: சேலம் வட்டக்காடு வனத்தில் வேட்டைக்கு சென்ற வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் தெற்கு வனசரகத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டி வனத்தில் மர்மநபர்கள், விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தெற்கு வனசரகர் துரைமுருகன் மற்றும் வனஊழியர்கள் தேக்கம்பட்டி, வட்டக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வட்டக்காடு பகுதியில் இரும்பு வலையுடன் ஒரு வாலிபர் வனவிலங்குகளை ேவட்டையாட முயன்றது தெரிந்தது. இதைபார்த்த வனத்துறையினர் இந்த வலையுடன் வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அந்த வாலிபர் வட்டக்காடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (36) என்பதும், வட்டக்காடு வனத்தில் வேட்டைக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வனவிலங்கு வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக அந்த வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வனவிலங்கு வேட்டையை தடுக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறாம்,’’ என்றனர்.

Related Stories: