×

500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர் ரத்து 625 மின் பஸ்கள் தனியார் மூலம் இயக்கம்: தமிழக அரசு திட்டம்

சென்னை: திமுக ஆட்சியில் போடப்பட்ட 500 மின்சார பஸ்கள் வாங்கும் டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு பதில் 625 மின்சார ஏசி பேருந்துகளை தனியார் மூலம் வாங்கி இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு துறைகளில் கடந்த ஆட்சியின்போது போடப்பட்ட பல டெண்டர்களை தொடர்ந்து ரத்து செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்காக போடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு தற்போது ரத்து செய்துள்ளது. மேலும், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக 625 பேருந்துகளை தனியார் மூலம் வாங்கி இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக அரசு அமைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கடந்த ஆட்சி காலத்தில் கோரப்பட்ட பல டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு துறைகளில் 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் கல்யாண மண்டபம் மற்றும் மல்டி லெவல் கார் பார்க்கிங் போன்ற ரூ.246 கோடி மதிப்பிலான பணிகளை தவெக அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான காரணத்தையும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டப்பேரவையில் கூறினார்.

இதற்கு, திமுக ஆட்சியின்போது இந்து சமய நலத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு விளக்கமாக பதில் அளித்தார். ஆனாலும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கே.எப்.டபிள்யூ (KfW) என்ற ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்க கடந்த திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு தற்போது ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும், டீசல் பேருந்துகளை விட மின்சார பேருந்துகள் குறைவான செலவில் அதிக தூரம் பயணிக்க கூடியது. இதனால் டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் பேருந்துகளை கொண்டுவர பல்வேறு தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 500 மின்சார பேருந்துகளை வாங்க ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், கடந்த 2023ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

இந்த நிலையில், மின்சார பேருந்துகளை இயக்குவதற்கும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதற்கும் போக்குவரத்து கழகங்களிடம் போதிய நிதி வசதி இல்லை என்று 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டரை ரத்து செய்துள்ளது தற்போதைய தவெக அரசு. மேலும், மொத்த செலவு ஒப்பந்த மாதிரியை பின்பற்றுவதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மொத்த செலவு ஒப்பந்த மாதிரியின் கீழ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக தனியார் நிறுவனங்களே 625 மின்சார பேருந்துகளை வாங்கி, இயக்கி, பராமரிக்கும் என்றும், அதே நேரத்தில் அரசு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணத்தை பொதுமக்களிடம் வசூலிக்க திட்டமிட்டு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மொத்த செலவு ஒப்பந்த மாதிரிக்கு ஒப்புதல் கோரி கடந்த ஜூன் 18ம் தேதி கே.எப்.டபிள்யூ என்ற ஜெர்மனி வங்கிக்கு தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளதாக தலைமை செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இப்படி தனியார் பங்களிப்புடன் பஸ்கள் இயக்குவதால், தனியாரே டிரைவர், கண்டக்டரை நியமிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய பேருந்துகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தும் நிலையில், புதிய பஸ்கள் தனியார் மூலம் இயக்கப்படுவதால், பணியில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதோடு புதிதாக அரசு வேலையும் கிடைக்காது என்ற நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

* சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்ய திமுக அரசில் திட்டமிடப்பட்டது.

* கே.எப்.டபிள்யூ ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்க 2023ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

* இந்நிலையில் 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டரை ரத்து செய்துள்ளது தற்போதைய தவெக அரசு.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Government of Teka ,Dimuka ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல்...