×

மிகுந்த பரபரப்புக்கு இடையே தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்

 

திண்டிவனம்: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பாமக இரு அணிகளாக போட்டியிட்டது. ராமதாஸ், அன்புமணி மோதல் காரணமாக கட்சிக்குள் ஏற்பட பிளவால் எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெற முடியவில்லை. தேர்தல் தோல்விக்குபின் ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்தார். அதேபோல் அன்புமணியை விமர்சிப்பதையும் அடியோடு நிறுத்தி விட்டார். அதேவேளையில் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக அறிக்கை வாயிலாக குரல் கொடுத்தார். அதேவேளையில் ராமதாசின் மூத்தமகளும், செயல் தலைவருமான காந்தியும் தனியாக அறிக்கைவிட்டபடி இருந்தார். தைலாபுரம் தோட்டத்துக்கு தொடர்ந்து வருகை புரிந்த கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு முன்னாள் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், ராமதாசுடனான அடிக்கடி சந்திப்பை தவிர்த்தனர்.

ஒருங்கிணைந்த பாமகவால் மட்டுமே எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என கருதி அவர்கள் ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதேபோல் பாமகவை வலுப்படுத்த வேண்டுமெனில் கிளை வாரியாக கட்சியினரை நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டுமென்ற கோரிக்கையை ராமதாசை சந்தித்த 2ம் மட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு, கட்சியை மீட்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பேன். என்னுடன் இருக்கிறவர்கள் இருக்கிறலாம்… போகிறவர்கள் போகலாம்… என கூறியிருந்தார். இதனிடையே பாமக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 2026 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே கட்சி யாருக்கு? என்பது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அடுத்தடுத்து இவ்வழக்கில் திருப்பம் ஏற்படலாம் என அக்கட்சிக்குள் தகவல் பரவின.

இதனிடையே ராமதாஸ்- சரஸ்வதி அம்மையாரின் 61ம் ஆண்டு திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலைக்கு சென்று திரும்பியிருந்த அன்புமணி, தனது குடும்பத்தினருடன் தைலாபுரத்துக்கு 4 கார்களில் வந்து தனது பெற்றோரை சந்தித்தார். அவருடன் மனைவி சவுமியா வந்திருந்தார். மேலும், அன்புமணியின் மகள் சங்கமித்ராவுக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அவரும், குழந்தையுடன் வந்திருந்தார். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். இந்த சந்திப்புக்குபின் தந்தை, மகன் இடையிலான மோதல் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

இதனால் தைலாபுரம் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் பார்த்த மகன் அன்புமணியை கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ். சந்திப்பின்போது ராமதாஸ் காலில் விழுந்து வணங்கிய அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி. 2.30 மணி நேர சந்திப்பின்மூலம் ராமதாஸ் -அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ்-அன்புமணி சந்திப்பின்போது சௌமியா மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.

 

Tags : Ramadas ,Anbumani ,Thailapura ,Ramdas ,Dindivanam ,Bhamaka ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED தமிழக சட்டப்பேரவை நிகழ்வு;...