×

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்

நாமக்கல், ஜூன் 24: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடை செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து கடைகளில் சோதனை செய்து, விற்பனைக்கு வைக்கப்படும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ஊராட்சி பகுதியிலும், இந்த சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடைகளில் சோதனை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, உணவு பாதுகாப்புதுறை, காவல்துறை, வருவாய்துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிய கூட்டு ஆய்வுக்குழு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் கூறியதாவது:
மாவட்டம் முழுவதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய, தொடர்ச்சியாக கண்காணிப்புகள் ஆய்வுகுழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் முறை தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை கண்டறியப்பட்ட கடைகளுக்கு உணவுபாதுகாப்புதுறை மூலம், ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு பதிவு, உரிமம் மற்றும் விற்பனை தடைசெய்யப்படும். மேலும் உள்ளாட்சி அமைப்பின் உரிமம் தடைசெய்யப்படுகிறது. அதேபோன்று, இரண்டாவது முறை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம், 30 நாட்களுக்கு பதிவு உரிமம் தடைசெய்யப்படும்.

மேலும் மூன்றாவது முறை விற்பனை செய்த கடைகளுக்கு, ரூ.1 லட்சம் அபராதமும், 90 நாட்களுக்கு பதிவு, உரிமம் விற்பனை தடைசெய்யப்படும். மேலும் குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் 15 வட்டாரங்களிலும் நேற்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், புகையிலைப்பொருட்கள் சம்மந்தமாக புகார்கள் இருந்தால் உணவு பாதுகாப்புதுறையின் வாட்ஸ்அப் புகார் எண்-94440 42322க்கு புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Namakkal ,Namakkal district ,Tamil Nadu government ,
× RELATED கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு