கிருஷ்ணகிரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு, அருங்காட்சியகம் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு நாள் யோகாசன பயிற்சி வழங்கப்பட்டது. பல்லாண்டு காலமாக இந்தியர்கள் பின்பற்றி வந்த யோகா முறைகள், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதனை நமது தினசரி வாழ்வியலில் கடைபிடிக்கும் போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை பயிற்சி மருத்துவ மாணவி ஹேமலதா எடுத்துரைத்தார்.
தொடர்ந்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் யோகாவின் முதல் பயிற்சி மூச்சுப் பயிற்சி, நின்ற நிலை ஆசனமான தாடாசனம், விருகாஷனம், அமர்ந்த நிலை ஆசனமான பத்மாசனம், வஜ்ராசனம் மற்றும் படுத்த நிலையில் செய்யப்படும் சவா சனம், சேதுபந்தாசனம் ஆகியவற்றை பயிற்றுவித்தனர். முடிவில், இயற்கை மருத்துவத்தில் தற்போது கடைபிடித்து வரும் முறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் மருத்துவர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சிக்கான நோக்கத்தினை காப்பாட்சியர் சிவக்குமார் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
