×

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

AI ஃபிலிம் மேக்கர்

சமீபத்தில் ஏஐ டூல்களை வைத்து ‘ஜாம்பி ஸ்கேவஞ்சர்’ என்ற குறும்படத்தை எடுத்தார் லியூ. 3.5 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படத்தை சமூக வலைத்தளங்களில் தட்டிவிட, ஒரு வாரத்திலேயே 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளிவிட்டது. இந்தப் படத்துக்கான பட்ஜெட் வெறும் 3000 யுவான்தான். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 42 ஆயிரம் ரூபாய். இந்தப் பட்ஜெட்டின் பெரும் பகுதி கூட சாஃப்ட்வேர் சப்ஸ்கிரிப்ஷனுக்குத் தான் செலவாகியிருக்கிறது.

பட்ஜெட்டைவிட, பல மடங்கு வருமானத்தை இந்த குறும்படம் பெற்றுத் தந்திருக்கிறது. மட்டுமல்ல, எங்களுடன் சேர்ந்து பணிபுரியுங்கள் என்று ஹாலிவுட்டிலிருந்து பலர் லியூவை அணுகியிருக்கின்றனர். குறிப்பாக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஏஐ ஃப்லிம் மேக்கரான பிஜே அக்சட்டரோ என்பவர் லியூவைக் கண்டுபிடித்துத் தரும்படி தனது டுவிட்டர் பக்கத்திலேயே பதிவிட்டிருக்கிறார். ‘‘எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் சீனாவிலேயே என் வேலையை பார்க்கப் போகிறேன்’’ என்று பதில் சொல்லியிருக்கும் லியூவின் வயது 29.

ஒரு டிக்கெட் ஒரு லட்சம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும்
‘த ஒடிஸி’ என்ற படம் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது. ஆனால், இந்தப் படத்துக்கான முன்பதிவு ஒரு வருடத்துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஆம்; ஐமேக்ஸ் 70 MM திரையரங்குகளுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூன் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. இத்தகைய திரையரங்குகள் உலகில் 30 மட்டுமே உள்ளன. இந்த திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே முதல் நாளுக்கான அத்தனை காட்சிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

அப்போது ஒரு டிக்கெட்டின் விலை 20 முதல் 25 டாலர் மட்டும்தான். இப்போது அந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் மறு விற்பனை செய்துவருகின்றனர். 20 டாலருக்கு வாங்கிய டிக்கெட்டுகள் 1000 டாலர் வரை போகிறது. திரையரங்கின் நடுவில் உள்ள இருக்கைகள் 1100 டாலர் வரை விற்கப்படுகின்றன. இந்திய மதிப்பில் ஒரு டிக்கெட் விலை சுமார் 1 லட்ச ரூபாய்.

எவரெஸ்டில் கால் பதித்த முதல் அசாம் பெண்!

இதுவரைக்கும் 6,600க்கும் அதிகமான ஆண்கள் எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக கால் பதித்திருக்கின்றனர். ஆனால், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த பெண்களின் எண்ணிக்கையோ வெறும் 947தான். கடந்த 1975ம் வருடம், மே மாதம் 16ம் தேதியன்று ஜப்பானை சேர்ந்த ஜங்கோ தாபேய் என்ற பெண் எவரெஸ்ட் மீது ஏறி, எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த முதல் பெண் மலையேற்ற வீராங்கனை என்ற சிறப்பை தன்வசமாக்கினார்.

சமீபத்தில் அசாமை சேர்ந்த மலையேற்ற வீராங்கனையான ரூபாமோனி கோர் என்ற பெண், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து, அசாமே கொண்டாடும் பெண்ணாக மாறியிருக்கிறார். இவர்தான் எவரெஸ்ட்டில் கால் பதித்த முதல் அசாம் பெண்.

தீவிரவாதத்தில் நம்பர் ஒன்!

கடந்த 2025ம் வருடத்திலிருந்து இன்று வரை தீவிரவாதத்தால் அதிகமாக பாதிப்படைந்த நாடுகளின் பட்டியல் வெளியாகி, அதிர்ச்சியளிக்கிறது. இதில் முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. புர்கினோ ஃபாஸோ, நைஜர், நைஜீரியா, மாலி, சிரியா, சோமாலியா, காங்கோ, கொலம்பியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கடந்த வருடத்தில் தீவிரவாதம் தொடர்பான மரணங்கள் புர்கினா ஃபாஸோ, பாகிஸ்தான், நைஜீரியா, நைஜர் மற்றும் காங்கோ ஆகிய ஐந்து நாடுகளில்தான் அதிகம். உலகெங்கிலும் தீவிரவாதத்தால் நிகழ்ந்த மொத்த மரணங்களில், 70 சதவீதத்திற்கு இந்த நாடுகளே காரணம்.

அதிகரிக்கும் மனநலப் பிரச்னை!

உலகம் முழுவதும் 120 கோடிப் பேர் மனநல பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாகும் என்று அதிர்ச்சியளிக்கின்றனர். அதாவது, உலகில் வாழும் 8 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு மனநலப் பிரச்னைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மருத்துவத் துறையில் முக்கியமான பிரச்னையாக இது கருதப்படுகிறது.

தொகுப்பு: த.சக்திவேல்

 

Tags : Saffron ,
× RELATED சமூக வலைத்தளங்களின் மாய உலகம்!