×

பரிவர்த்தனை மட்டுமல்ல... எண்ணிக்கையும் குறைந்தது : செலவை குறைக்க 2,500 ஏடிஎம்கள் மூடல்

புதுடெல்லி: செலவை குறைக்கும் நடவடிக்கையாக 10 மாதங்களில் 2,500 ஏடிஎம்களை வங்கிகள் மூடியுள்ளன.  வராக்கடன் பிரச்னையில் வங்கிகள்  சிக்கி தவிக்கின்றன. இதனால் வருவாய் இழப்பு மட்டுமின்றி, நிர்வாக செலவுகளை சமாளிக்கவும் போராட வேண்டியுள்ளது. இதனால் நிர்வாக  செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏடிஎம்கள் எண்ணிக்கையை வங்கிகள் குறைத்து வருகின்றன. இதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 10 மாதங்களில் 2,00க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டு வருகின்றன.  இதனால் 1,10,116 ஆக இருந்த ஏடிஎம் எண்ணிக்கை  1,07,630 ஆக சரிந்துள்ளது. அதாவது 2,486 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன என்பது ரிசர்வ் வங்கி புள்ளி  விவரம் மூலம் தெரிய வந்துள்ளது இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் எண்ணிக்கை மற்றும் சிறிதளவு உயர்ந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி  அதிக ஏடிஎம்களை மூடியுள்ளது.

நிதி நிலையை வலுப்படுத்தி அவற்றின் செயல் திறன்களை அதிகரிக்கும் வகையில் சில வங்கிகள் சீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இதில்  வங்கி கிளைகளுடன் இணைந்த சில ஏடிஎம்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில வங்கிகள் கிளையுடன் இணைந்திருந்த ஏடிஎம்களை மூடிவிட்டு,  வேறு இடங்களில் புதிய ஏடிஎம்கள் நிறுவியுள்ளன.  வங்கிகள் மூடிய ஏடிஎம்கள் விவரம் வருமாறு: (அடைப்புக்குறிக்குள் உள்ளவை வங்கி கிளையில்  இருந்த ஏடிஎம்கள் எண்ணிக்கை) பாங்க் ஆப் இந்தியா 208 ஏடிஎம்களை (வங்கி கிளையுடன் இருந்தவை 108) கனரா வங்கி 997 (189), சென்்ட்ரல் பாங்க்  ஆப் இந்தியா 344 (27), பஞ்சாப் நேஷனல் வங்கி 1,122 (655) ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.  அதேநேரத்தில், பாரத ஸ்டேட் வங்கி கிளையுடன்  இணைந்திருந்த ஏடிஎம்கள் எண்ணிக்கை 29,150ல் இருந்து 26,505ஆக குறைந்துள்ளது.

ஆனால் பிற இடங்களில் உள்ள ஏடிஎம்கள் எண்ணிக்கை 29,917ல் இருந்து 32,680 ஆக உயர்ந்துள்ளது. வங்கி நிர்வாக செலவுகளில் ஒன்றாக ஏடிஎம்  பராமரிப்பு செலவுகளும் அடங்கும். இவை அதிகரித்ததால் சிக்கனம் கருதி மூடப்பட்டுள்ளதாகவும், வராக்கடன் போன்றவற்றால் நிதி நிலையில் சிக்கல்  ஏற்பட்டால் மேலும் சில ஏடிஎம்கள் மூடப்படவும் வாய்ப்புகள் உள்ளன.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் நிறுவ ரூ.5 லட்சம் செலவானது. தற்போது  ரூ.50,000 முதல் ரூ.60,000 செலவில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவி விடுகின்றனர். முன்பு 100 சதுர அடி பரப்பளவில் ஏடிஎம் நிறுவப்பட்டது. தற்போது  செலவை குறைக்க சிலர் ஏடிஎம் இருக்கும் இடத்துக்கு மட்டும் வாடகை செலுத்தி நிறுவுகின்றனர். ஏசி வசதி கூட இருப்பதில்லை என வங்கி  அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கிளைகளுக்கு மக்கள் நேரில் வருவதை தவிர்த்து, பணம் எடுப்பதற்கு ஏடிஎம்களை பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தி வந்தன. பின்னர், செலவு  அதிகரிப்பதாக கூறி ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கி  ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறையும், பிற ஏடிஎம்களில் 3 முறையும் கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்  வங்கிச்சேவைகளுக்கு கிளைகளுக்கு நேரில் வந்தால் செலவு அதிகரிக்கிறது. இந்த நிலையில் ஏடிஎம் மூடுதல், பரிவர்த்தனை கட்டுப்பாடுகள்  தொடர்ந்தால் மக்கள் எல்லா சேவைகளுக்கும் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என வங்கியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...