×

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜம்பேட்டை நாடாளுமன்ற தொகுதி எம்பி பெத்திரெட்டி மிதுன்ரெட்டி. திருப்பதியில் தங்கியுள்ள இவர், தனது கட்சியினர் வீடுகள் இடிக்கப்பட்டதாக அறிந்து இன்று அங்கு செல்ல அவர்களுக்கு ஆறுதல் கூற இருந்தார். இந்நிலையில் போலீசார் நேற்று பெத்திரெட்டி மிதுன்ரெட்டி வீட்டிற்கு சென்று ராஜம்பேட்டை சென்றால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறி அவரை வீட்டு காவலில் வைத்தனர். இதையடுத்து அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

இதற்கிடையில் பெத்திரெட்டி மிதுன்ரெட்டி கூறுகையில், ‘தேர்தலுக்கு பிறகு பல இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர், எங்கள் கட்சியினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது மிகவும் மோசமான நிலை. புங்கனூரில் இதுவரை இல்லாத புதிய கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் இடிக்கப்படுகிறது. ஜில்லா பரிஷத், மண்டல பரிஷத், பஞ்சாயத்து தலைவர்களை மிரட்டி கட்சி மாறும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் நடக்கும் போட்டி ஆரோக்கியமானது. ஆனால் தேர்தலுக்கு பிறகு வீடுகளை தாக்குவது கொடுமையானது.

பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்றால் போலீசார் தடுத்து வீட்டு காவலில் வைக்கிறார்கள். எனது தொகுதிக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்கள். இதை மக்களவை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி அரசு புதிய போக்கை தொடங்கியுள்ளது. எங்களுக்கு மாநிலம் முழுவதும் வாக்களித்த 40 சதவீத மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்படுவார்களா?. நான் பாஜகவில் சேர ேபாகிறேன் என பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். எக்காராணத்திற்காகவும் நான் கட்சி மாறமாட்டேன்’ என்றார்.

The post ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : YSR ,Andhra ,Thirumalai ,Petretti Mitunreti ,Rajampet ,AP State YSR Congress Party ,Tirupati ,YSR Kong ,
× RELATED அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி வந்த...