×

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞர் உடல் நசுங்கி பரிதாப பலி: செய்யூர் அருகே சோகம்

செய்யூர்: செய்யூர் அருகே இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதியதில், இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சதீஷ்குமார் (22). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் செய்யூர் சென்றுவிட்டு வீடு திருப்பிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த கனரக லாரி சதீஷ்குமார் பைக் மீது பலமாக மோதியது. இதில், சதீஷ்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை அறிந்த ஓட்டுநர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த செய்யூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அங்கு கூடிய ஓதியூர் பகுதி பொதுமக்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களின் கோரிக்கைப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞர் உடல் நசுங்கி பரிதாப பலி: செய்யூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Seyyur ,Satish Kumar ,Odiyur ,Seyyur, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED அரியனூர் ஊராட்சியில் இடிந்து விழும்...