×

இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்: ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும்

* நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீருவோம்

* மாநில உரிமைகள் பறிப்பு, ஜனநாயக படுகொலை, மதவாத அரசியல், பாஜவின் கைப்பாவையாக இருக்கும் சிபிஐ,ஈ.டி, ஐ.டி.க்கு கண்டனம்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டின் தீர்மானங்களை அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார். மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு:

1இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டிற்கு அனுமதி தந்து, அதனை மாநில உரிமை மீட்பு முழக்கமாக முன்னெடுக்கச் செய்த இளைஞரணியின் தாயுமானவரான கழகத் தலைவர் தமிழக முதல்வருக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

2 முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணப்படி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு பெயர் பெறவும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர்ந்திடவும், இளைஞர் அணி அயராது பாடுபடும்.

3 நகரப் பேருந்துகளில் மகளிருக்கு விடியல் பயணத் திட்டத்தை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

4 1 கோடியே 15 இலட்சத்து 84 ஆயிரத்து 300குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதற்கும், இந்த உரிமைத் தொகையைப் பெற இயலாதவர்களில், தகுதி வாய்ந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்துத் தீர்வு காணும் பொறுப்பினை இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதியிடம் ஒப்படைத்துள்ள முதல்வருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

5 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என இந்தியாவுக்கே முன்னோடியான திட்டத்தினை 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி, 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று, உடல்நலனும் ஊக்கத்திறனும் பெறுவதற்கு காரணமான முதல்வருக்கு நன்றி.

6 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் கல்லூரிக் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தினைச் செயல்படுத்தி, இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி அவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

7 ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமானவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்படுவது, விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றும் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் வாயிலாக, விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிர் காக்கத் தேவைப்படும் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்து, 2 லட்சம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

8 தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளினை கொண்டாடும் வகையில் அரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய தொகுப்புடன் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

9 தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும் அருகில் உள்ள மாவட்டங்களிலும், தென்தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலும் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பில், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய அளவில் பேரிடர் நிதி எதுவும் வழங்காத நிலையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து, குடும்பங்களுக்குத் தலா ரூ.6,000 வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

10 முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் வீழ்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, கடந்த இரண்டாண்டுகளில் மிகப் பெரிய அளவில் முதலீடுகளையும் தொழிற்சாலைகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024ஐ வெற்றிகரமாக நடத்தி, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நோக்கி, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டைப் புதிய பாய்ச்சலுடன் முன்னேறிடச் செய்யும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

11 நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என முத்தமிழறிஞர் புகழ்போற்றும் நிலையான அமைப்புகளை உருவாக்கித் தந்துள்ள முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றியினை தெரிவித்துக் கொண்டு, முத்தமிழறிஞர் ஊட்டிய மொழி-இன உணர்வுடன் இளைஞரணி தன் பயணத்தை தொடரும் என்ற உறுதியினை வழங்குகிறது.

12 செஸ் ஒலிம்பியாட் முதல், கேலோ இந்தியா வரை தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக்கும் வகையில் பன்னாட்டுத் தரத்துடன் பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலினின் அயராத முயற்சிகளை பாராட்டுவதுடன், உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய வகையில், தமிழர்களை ஊக்குவிக்கும் பயிற்சிகளை திமுக இளைஞர் அணி முன்னெடுக்கும்.

13 நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தி, நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

14 தேசிய கல்விக் கொள்கையைக் திமுக இளைஞர் அணி முழுமையாக எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டில் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை எதிர்த்து மாணவர், இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய அளவிலான போராட்டங்களை இளைஞர் அணி முன்னெடுக்கும்.

15 பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும், மருத்துவத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான சட்ட வழிமுறைகளை இளைஞர் அணி முன்னெடுக்கும்.

16 தமிழ்நாட்டின் செம்மையான உயர்கல்வி ஆராய்ச்சிக் கல்வி நீடித்திட, பல்கலைக்கழக வேந்தர் எனும் உயர் பொறுப்புக்கு, நியமனப் பதவியில் உள்ள ஆளுநருக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரே தகுதியானவர் என்பதால், பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் செயல்படுவார் என்கிற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிப்பதுடன், அதனை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.

17 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பாஜ ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பாஜ அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற `தொங்கு சதை’யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

18 தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஆண்பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளித்துப் பணியிடங்களில் நியமித்திட வேண்டும். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

19 ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்பட வேண்டும். மாநிலங்களை நகராட்சிகளைப் போல நடத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ. அரசின் வல்லாதிக்கப் போக்கைக் கண்டித்தும் இந்த மாநில உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

20 கூட்டாட்சி அடிப்படையிலான இந்திய ஒன்றிய அரசு, சுயாட்சிமிக்க மாநில அரசுகள் என்பதே ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும். அதிகாரக் குவிப்பைத் தகர்த்து, அதிகார பரவலாக்கத்தை முன்னெடுக்கும் வகையில், கலைஞர் நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில், தற்போதைய தேவைகளையும் இணைத்து, மாநில அரசுகளின் அதிகாரத்தை வலிமைப்படுத்திட வேண்டும்.

21 அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றை தன் கைப்பாவையாக பயன்படுத்தி பா.ஜ. அல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதும், பா.ஜ.வை எதிர்க்கின்ற கட்சிகள் மீதும் வன்மத்துடன் தாக்குதல் நடத்தும் ஒன்றிய பா.ஜ. அரசின் பழிவாங்கும் அரசியல் போக்கிற்கும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலை எடுத்தால், அவர் மீதான வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘தூய்மைப் பட்டம்’ அளிக்கும் ‘வாஷிங் மெஷின் பா.ஜ.’ அரசின் இரட்டை வேட செயல்பாடுகளுக்கும் இந்த மாநாடு வன்மையானக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.

22 இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே கூட்டத் தொடரில் 146 மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துள்ள பா.ஜ. அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிப்பதுடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இத்தகைய சர்வாதிகார சக்திகளை முழுமையாக வீழ்த்திட உறுதியேற்போம்.

23 தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மக்களுக்குச் செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி ராமர் கோயிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளை ஏமாற்றும் செயலாகும். நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, ராமர் கோயிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.,வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும்.

24 பத்தாண்டு காலம் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், இந்தியாவைச் சீர்கெடச் செய்து வருவதுடன், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ., ஆட்சியை அடியோடு வீழ்த்திட, முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் தேர்தல் களங்கள் அனைத்திலும் இளைஞர் அணி முன்களப் போர்வீரர்களாகச் செயல்படும்.

25 திமுக இளைஞர் அணி, தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டளைக்கேற்ப 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம் தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது. இவ்வாறு 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்: ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : CBI ,ED ,IT ,BJP ,DMK Youth Congress 2nd State ,Congress ,Governor ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...