×

இளையத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான அய்யா நல்லகண்ணுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று தனது 99வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தோழர் நல்லக்கண்ணு என்று அழைத்து வாழ்த்து கூறி வருகின்றனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல மனிதராக நல்லகண்ணு போற்றப்படுகிறார். எளிமையான தலைவர் நல்லக்கண்ணு.

தனது 18வது வயதில் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரப்பூர்மாக இணைத்துக் கொண்டார். ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி சுற்றுவட்டார பட்டியல் இன மக்களின் வாழ்வினை மேம்படுத்த கணிசமான போராட்டங்களை முன்னெடுத்தார். சாதியற்ற சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் நல்லகண்ணு. இவரின் பிறந்தநாளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில்,

டிடிவி தினகரன் வாழ்த்து:

நல்லகண்ணு பிறந்தநாளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நதிநீர் உரிமைகள் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் போராளி ஐயா நல்லகண்ணு அவர்கள் பூரண உடல்நலத்துடன் நூற்றாண்டு கடந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விடுதலைப் போராட்டத் தியாகியும் – முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம். தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணங்கள், முதற்கட்ட இழப்பீடுகளை வழங்கி வந்துள்ள நிலையில், அங்குள்ள கள நிலவரங்களை அய்யா அவர்கள் அக்கறையுடன் கேட்டறிந்தார்கள்.

அங்கு, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விளக்கிக் கூறினோம். போராட்டக் குணம், எளிமை, ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி என இளையத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான அய்யா நல்லகண்ணு அவர்கள் நூற்றாண்டையும் கடந்து மேலும் பல்லாண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும். அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிகே வாசன் வாழ்த்து:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணுவுக்கு 98 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பவர். தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, தமிழ்நாடு முன்னேற அயராது பாடுபடுபவர். பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமையைப் பின்பற்றுபவர். ஐயா நல்லக்கண்ணு நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இளையத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான அய்யா நல்லகண்ணுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Ayya Nallakann ,Chennai ,Nallakannu ,Minister ,Udayanidhi ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை