×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

அன்னையென கனிதல்

‘‘சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப்படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை”.

– வெண்முரசு. ஜெயமோகன்

ஒரு பெண் அடையும் முழுமையும், விடுதலையும், அவள் தாயாகி கனிவதில் நிறைவுறுகிறது. இந்த முழுமையை, விடுதலையை ஒரு ஆண் வாழ்நாளெல்லாம் முயன்று,சென்று அடையவேண்டியுள்ளது. எனினும், மகப்பேறு என்பது வரம் என்றும் அதற்கிணையான சவால்கள் என்றும் கருதலாம்.மகப்பேறு காலத்தை கடந்த நூற்றாண்டு வரை மறுபிறவி என்றே, சொல்வதுண்டு. இன்று மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்தாலும், பெண்களிடையே ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வாலும், பிரசவ காலத்தை ஒரு மகிழ்ச்சியான,கொண்டாட்டமான, நாட்களாக மாற்றியிருக்கிறது. இதில், கருவுற்ற நாள் முதல் பெண்ணிற்கு ஒருவிதமான பதற்றமும், பயமும், இருந்துகொண்டேயுள்ளது. அவை இரண்டு காலங்களை பற்றியது. ஒன்று குழந்தை ஆரோக்கியமாக வெளிவரும் நாள் வரையானது. அடுத்து குழந்தை பிறந்த பின்னர் அன்னையின் உடல் நலன் தேறி இயல்பான ஆரோக்யத்திற்கு திரும்புவது வரை.

ஆகவே, pre-natal. Post-natal என நவீன மருத்துவம் வகைமைப் படுத்துகிறது.கரு வளரும் காலம் முதல் குழந்தை பிறப்பு வரை pre-natal என்றும், குழந்தை பிறந்து, தாய் முழுவதுமாக ஆரோக்கியமான நிலைக்கு திரும்பும் வரையான காலத்தை post natal என்றும் வகைமைப் படுத்தலாம். கருவுற்ற தாய் ஒரு நாளைக்கு மூன்று முறையோ, நான்கு முறையோ தான் உணவு உண்கிறார், எனினும் கருவிலிருக்கும் சிசுவோ எல்லா நேரத்திலும் அன்னையின் உணவை உண்டு கொண்டே தான் இருக்கிறது. அதாவது அன்னையை உண்டு அங்கேயே வளர்கிறது.
ஆக இயல்பாகவே, அன்னைக்கு உடல் சோர்வும், அதனை தொடர்ந்து உடலியலில் மாற்றமும், உளவியல் மாறுபாடுகளும் நிகழ்கிறது.

இன்று, பிரசவம் சார்ந்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வந்துவிட்டன, எனினும் அவற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலானோர், ஆண்கள் என்பதால், ‘‘கவலைப்பட வேண்டாம், ஈஸியா எடுத்துக்கோங்க”போன்ற போகிற போக்கில் சொல்லும் அறிவுரைகளே மிகுதி.அவற்றிலிருந்து, மேம்பட்ட, மற்றும் நிபுணத்துவமும், அக்கரையும் கொண்ட சிலர் சொல்வதை நாம் செவி கொள்ள வேண்டியது அவசியம்.முக்கியமாக, ஆயுர்வேதமும், யோகமும், மகப்பேறு சார்ந்து தனித்த முழுமையான பார்வையை கொண்டவை ஆயுர்வேதத்தில், ‘‘கர்ப்பகால, பால சிகிச்சை” என்கிற பிரத்யேக பிரிவு இருப்பது போன்று, யோகத்தில் ‘‘கர்பரிக்‌ஷா யோக சாதனா” எனும் பாடத்திட்டமே உள்ளது.

இதில், பெண்ணின் உடல், உளம் என்கிற இரண்டு நிலைகளுக்கும் பயிற்சி களும், பிரசவத்திற்கு பின்னர், உடலும் உளமும் மீள்வதற்கான பயிற்சிகளும் உள்ளடங்கியவை. இந்த காலகட்டத்தில் தான் ஒரு பெண்ணின், ரத்த ஓட்ட மண்டலம், சுரப்பிகளின் செயல்பாடு போன்ற செயல்பாடுகள் 40% வரை அதிகரிக்கிறது.இவை போஷாக்கான உணவின் மூலமும், ஆரோக்யமான, வாழ்வியல் முறைகளால் மட்டுமே அடைபவை.

20% உடல் எடையும் கூடிவிடுவதால், சுவாச மண்டலத்தின் செயல்பாடும் அதே அளவு கூடுகிறது.ஆகவே யோகமரபு வெறுமனே ‘‘உடற்பயிற்சி செய்யவும்”என்று அறிவுறுத்தாமல், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இரண்டு வகையான பாடத்திட்டத்தை வழங்குகிறது. முதல்வகை கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தை பெறும் நாள் வரை (pre natal). குழந்தை பெற்ற நாள் முதல் ஒருவருடத்திற்குள் அடையவேண்டிய உடல், உள ஆரோக்கியம்.

உதாரணமாக, பவண் முக்தாசனா (ஒரு ஆசனம் அல்ல) எனும் ஒரு 10 பயிற்சிகள் கொண்ட பாடதிட்டம் , வலி குறைவான, இலகுவான சுகபிரசவம் முதல், ஆற்றல் விரயமாவதை தடுப்பது வரை முக்கிய பங்காற்றுகிறது. இத்துடன், கர்ப்ப கால யோக நித் ரா எனும் ஓய்வு பயிற்சி, பதற்றம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களை முற்றிலும் நீக்கி, உளச்சமன் கொள்ள உதவுகிறது. ஆகவே, கர்ப்ப காலத்தை மூன்று காலகட்டங்களாக பிரித்து இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

பின்னர் பிரசவம் முடிந்த நாள் முதல் அனைத்து உடல் ஆற்றலையும் செலவளித்த பெண்ணிற்கு மீண்டெழ (post natal) ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இரண்டு கட்ட பயிற்சி திட்டத்தை யோகம் பரிந்துரை செய்கிறது. இவை அனைத்தும் பெரும்பாலும் ஆய்வுப்பூர்வமாகவும் இன்று நிறுவப்பட்டுள்ளது.கைவல்ய தாம், சத்யானந்த யோக பரம்பரை போன்ற அமைப்புகள் கடந்த ஐம்பது வருடங்களில் செய்த ஆய்வும், களப்பணியும், உலகிற்கு ஒரு நற்கொடை.

இவ்வகை பயிற்சிகளை முடிந்தவரை கும்பலாக, கூட்டத்தில் ஒருவராக நின்று கற்றுக்கொள்ளாமல், தனியாக ஒரு ஆசிரியரின் தொடர்பிலிருந்து, அவருடைய வழிகாட்டுதலில் மட்டுமே செய்ய வேண்டும். அந்த ஆசிரியரும் மரபார்ந்த பள்ளியை சேர்ந்தவராக இருத்தல் அவசியம்.

ஆயுர்வேத தந்தை சரகர் சொல்வது போல, நோயுடன் வரும் ஒரு நபரை, தன் மகனை போல ஒரு மருத்துவர் கையாள வேண்டும்” என்பது போல கர்ப்பம் தரித்த பெண்ணை தன் மகளைப்போல கையாளத்தெரிந்த யோக ஆசிரியர் அமைந்தால். அனைத்தும் சிறப்பாக நிறைவுறும்.

பூர்ண தித்தலி

இந்த பகுதியில் பூர்ண தித்தலி எனும் பயிற்சியை காணலாம். பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டு இருப்பது போல வைத்து, காலை,கை விரல்களால் பிடித்துக்கொள்ளவும். முதலில் மூச்சுடன் இணைந்து மேலும் கீழுமாக அசைக்கவும். பின்னர் படிப்படியாக வேகத்தை அதிகரித்து முப்பது முறை செய்து விட்டு கால்களை நீட்டிக்கொள்ளவும்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,Selendarajan ,G. ,
× RELATED முட்டை மிட்டாய்