- நமீபியா
- அருமை
- ஓமான்
- உலக கோப்பை
- பிரிட்ஜ்டவுன்
- ஐசிசி உலகக் கோப்பை ஆண்கள் டி 20
- பார்படோஸ், மேற்கு இந்தீ
- தின மலர்
பிரிட்ஜ் டவுன்: ஐசிசி உலக கோப்பை ஆண்கள் டி20 தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா – ஓமன் அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீசின் பார்படாஸில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, ஓமன் அணி 2.3 ஓவரில் 10 ரன்னுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்தது. ஜீஷன் மக்சூத் 22, காலித் கய்ல் 34 ரன் எடுத்ததால் ஓமன் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஓமன் 19.4 ஓவரில் 109 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சிறப்பாகப் பந்துவீசிய நமீபியாவின் ட்ரம்பெல்மன் 4, டேவிட் வீஸ் 3, ஜெரார்டு 2 விக்கெட் அள்ளினர்.
அதன் பிறகு 110 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் வான் 2வது பந்திலேயே டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நிகோலஸ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஜான் ஃபிரைலிங்க் கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்தார். மெஹ்ரன் கான் வீசிய அந்த ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. ஃபிரைலிங்க் (45 ரன்) முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஜான் கிரீன் 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
அதனால் 3 பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில் நமீபியாவால் 4 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. எனவே நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுக்க ஆட்டம் சரிநிகர் சமனில் (டை) முடிந்தது. ஓமனின் மெஹ்ரன் கான் 3 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் நமீபியா விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழப்புக்கு 10 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. நமீபியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. டேவிட் வீஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
* தூர்தர்ஷனில் லைவ்:
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஆட்டங்கள் தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என பிரசார்பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் துவிவேதி நேற்று அறிவித்துள்ளார். உலக கோப்பை தொடர் மட்டுமல்லாது பாரிஸ் ஒலிம்பிக், பாராலிம்பிக் தொடர்கள், பிரெஞ்ச் ஓபன், இந்தியா – ஜிம்பாப்வே, இந்தியா – இலங்கை உள்பட முக்கியமான சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரசிகர்கள் டிடி சேனல்களில் கண்டு களிக்கலாம்.
* இலங்கை 77
நியூயார்க்கில் நேற்று நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 19.1 ஓவரில் வெறும் 77 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 19, ஏஞ்சலோ மேத்யூஸ் 16, கமிந்து மெண்டிஸ் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (4 பேர் டக் அவுட்). தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் அன்ரிச் 4, ரபாடா, கேஷவ் தலா 2, பார்ட்மேன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
The post உலகக்கோப்பையில் ஓமனுக்கு எதிராக சூப்பர் ஓவரில் நமீபியா வெற்றி appeared first on Dinakaran.