×

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: இந்தியா உள்பட 8 நாடுகள் பங்கேற்கும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஜூன் 17ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, மலேசியா உள்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு இணைந்து நடத்துகின்றன. இதற்கு முன் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி 2011ம் ஆண்டு சென்னையில் நடந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சென்னையில் நடக்கிறது.

போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஸ்குவாஷ் சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ஆட்டங்கள் நாளை முதல் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் நடைபெறும். உலக ஸ்குவாஷ் வரலாற்றில் முதல்முறையாக ஒவ்வொரு அணியிலும் வீரர்களுக்கு சமமாக வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் எகிப்து அணிதான் வலுவான அணியாக பார்க்கப்படுகிறது.

* பங்கேற்கும் நாடுகள்: இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரலேியா, கொலம்பியா.
* ஆட்டமும்…அணிகளும்: போட்டியில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தலா 2 வீரர், வீராங்கனைகள் என 4 பேர் கொண்ட அணி பங்கேற்கும். ஒவ்வொரு ஆட்டமும் அதிகபட்சமாக 5 செட்களை கொண்டதாக இருக்கும்.
* புள்ளிகள்: லீக் சுற்றில் ஒவ்வொரு ஒற்றையர் பிரிவு வெற்றிக்கும் தலா 2 புள்ளி, இரட்டையர் பிரிவு வெற்றிக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும். நாக் அவுட் சுற்றில் ஆட்டம் டிராவானால் வெற்றி பெற்ற செட்களின் அடிப்படையில் வெற்றி,தோல்வி முடிவு செய்யப்படும்.
* இந்திய அணி: சவுரவ் கோஷல், அபய் சின்ஹா, ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா.
* போட்டி நடைபெறும் இடம்: எக்ஸ்பிரஸ் அவென்யூ, ராயப்பேட்டை. ஸ்குவாஷ் அகடமி (ஐஎஸ்டிஏ), சேத்துப்பட்டு (தினமும் ஆட்டங்கள் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்).

The post உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : World Squash Championship ,Chennai ,Sports Minister ,Udhayanidhi Stalin ,World Squash Championships ,India ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை