×

பைக் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி பலி குலசேகரம் அரசு மருத்துவமனை முற்றுகை

*சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் பொதுமக்கள் ஆத்திரம்

குலசேகரம் : குலசேகரம் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.குலசேகரம் அருகே தும்பக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் டென்னிஸ்(35), கட்டுமான தொழிலாளி. இவர் பிணந்தோடு பகுதியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே உண்ணியூர் கோணம் கைரளிநகர் பகுதியை சேர்ந்த சஜிசக்ரியா(57) என்பவர் வேகமாக வந்து இவரது பைக்கில் மோதினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய டென்னிசை அந்த பகுதியினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நர்ஸ்கள், டாக்டரை அழைத்து உடனடியாக வரச்சொல்வதாக கூறினர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகே டாக்டர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் விபத்தில் சிக்கியவரை பரிசோதித்துவிட்டு டென்னிஸ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் டென்னிசின் உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்தனர். அவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் டென்னிசை காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எந்தவித பலனும் இல்லை. இதனால் முற்றுகை போராட்டம் 10.30 மணி வரை நீடித்தது. இந்த தகவல் அறிந்ததும் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எழுத்து மூலம் புகார் கொடுத்தால், மேலதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. விபத்தில் இறந்துபோன டென்னிசுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து அவரது தாயார் சாந்தகுமாரி (55) அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த சஜிசக்ரியா மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவில் பணிக்கு வராத டாக்டர்கள்

குலசேகரம் அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மலைவாழ் பகுதி மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு மதியத்துக்கு மேல் டாக்டர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் டாக்டர் யாரும் இருப்பதில்லையாம்.

இதனால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் விபத்தில் சிக்குபவர்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே இந்த மருத்துவமனையில் முழுநேரம் டாக்டர்கள் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பைக் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி பலி குலசேகரம் அரசு மருத்துவமனை முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kulasekaram Government Hospital ,Kulasekaram ,Dinakaran ,
× RELATED கடன் தொல்லையால் தொழிலதிபர்...