×

பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

குன்றத்தூர்: குன்றத்தூர் நகராட்சியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி, தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்றத்தூர் நகராட்சியில் உள்ள 30 வார்டு பகுதிகளிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் பேரூராட்சியாக இருந்த குன்றத்தூர், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தங்களை நிரந்தரமாக்காமல், புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி, நேற்று திடீரென தங்களது பணிகளை புறக்கணித்து நகராட்சி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்த குன்றத்தூர் நகராட்சி ஆணையர் தாமோதிரன் விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, தூய்மை பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு ஒரு வாரத்தில் நல்லதொரு பதில் தருவதாக, நகராட்நி ஆணையர் உறுதியளித்தார். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* குப்பை சேகரிக்கும் பணி தடைபட்டது
இதனிடையே தூய்மை பணியாளர்களின் இந்த திடீர் போராட்டத்தால், குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிகள் அனைத்தும் நேற்று தடைப்பட்டது. ஆங்காங்கே சாலைகளில் கண்டபடி குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

The post பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Kunradthur Municipality ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்திய...