×

மகளிர் உரிமை திட்ட சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 98 வார்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும். குடும்ப அட்டை பயன்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடையில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவி டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பதிவின் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்க தேவையில்லை. வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். விரல் ரேகை சரியாக பதிவாக வில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்ட கைப்பேசி வழியாக ஒரு முறை கடவுசொல் (ஓ.டி.பி.) பெறப்படும். எனவே முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போனை எடுத்து வர வேண்டும். இதுகுறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 என்ற தொலைபேசி எண், 94454 77205 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மகளிர் உரிமை திட்ட சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,CHENNAI ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED மழைக்காலத்தில் அதிகாரிகள்...