×

மகளிர் ஆசிய கோப்பை: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது இலங்கை அணி

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தம்புல்லாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதன்முறையாக ஆசியக்கோப்பையை வென்றது.

மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தம்புல்லாவில் உள்ள ரங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சச்சினி நிசன்வாலா, சாமர அதபத்து ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார். கேப்டன் சாமரி அதபத்து 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா மட்டுமே விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இது மட்டுமின்றி, மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

The post மகளிர் ஆசிய கோப்பை: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது இலங்கை அணி appeared first on Dinakaran.

Tags : Women's Asia Cup ,Sri Lanka ,Dambulla ,women's Asia Cup cricket ,Asia Cup ,India ,Tambulla ,Women's Asia Cup Finals ,Dinakaran ,
× RELATED பொருளாதார நெருக்கடியில் இருந்து...