×

பாரிமுனையில் கஞ்சா விற்ற 5 பெண்கள், சிறுவன் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை பகுதியில் கஞ்சா விற்ற 5 பெண்கள், சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனை வடக்கு கடற்கரை சாலை பகுதியில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று ஆய்வாளர் ராஜாசிங், உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் பாரிமுனை பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்திருந்த 5 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் மண்ணடி கிளைவ் பேக்டரி கோபால்நகரை சேர்ந்த ஸ்டெல்லா (49), பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியை சேர்ந்த சவுந்தர்யா (23), மண்ணடி மூக்கர் நல்லமுத்து தெருவை சேர்ந்த சங்கரி (22), ஜோதி (47), வடக்கு கடற்கரை சாலையை சேர்ந்த கருப்பாயி (60) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பாரிமுனை பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பெண்களை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். முக்கிய குற்றவாளியான வின்சென்ட்டை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பாரிமுனையில் கஞ்சா விற்ற 5 பெண்கள், சிறுவன் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Barimuna ,Thandaiyarpet ,Parimuna ,Chennai ,Dinakaran ,
× RELATED இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை...