×

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் சுற்று 1ல் வென்ற நம்பர் 1 சின்னர் : 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் அபார வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் (23), சக நாட்டு வீரர் லூகா நார்டி (21) உடன் மோதினார்.

துவக்கம் முதல் சாமர்த்தியமாகவும் துடிப்புடனும் செயல்பட்ட சின்னர், 6-4, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த டாம்மி பால் (28), பிரிட்டனை சேர்ந்த ஜோகன்னஸ் மோன்டே (23) உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட டாம்மி பால், 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் டெய்லர் பிரிட்ஸ் (27), பிரான்சை சேர்ந்த 36ம் நிலை வீரர் கியோவன்னி பெட்ஷி பெர்ரிகார்ட் (21) மோதினர்.

இப்போட்டியில் டெய்லருக்கு ஈடுகொடுத்து பெர்ரிகார்ட் ஆடியதால், முதல் இரு செட்களை அவர் கைப்பற்றினர். 3வது செட்டையும் பெர்ரிகார்ட் வெல்லும் சூழல் காணப்பட்டது. அதன் பின் சுதாரித்து ஆடிய டெய்லர் தொடர்ந்து 3 செட்களை கைப்பற்றினார். கடைசியில், 6-7 (6-8), 6-7 (8-10), 6-4, 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் சுற்று 1ல் வென்ற நம்பர் 1 சின்னர் : 2ம் சுற்றுக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Janik Sinner ,Wimbledon Open Tennis Round ,London ,Wimbledon Open Tennis Championship ,Wimbledon Open Tennis Tournament ,Grand Slam ,British ,Wimbledon Open Tennis ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...