×

ஆலமரத்தை சாட்சியாக அழைப்பது ஏன்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சமுதாயத்தில் மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆலமரம், அரசமரம் அத்திமரம், வேப்பமரம் போன்ற மரங்கள் மிகவும் முக்கியமானதாகும். `சிரார்த்தம்’ செய்வதற்கு இதன் குச்சிகளை நாம் இன்றும் பயன்படுத்தி வருகின்றோம். `யாகம்’ நிறைவடைய மணம், குணம் எல்லாம் உயர்ந்த நிலையில் இருக்கக் கூடியது.தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் சாட்சி சொல்வதற்கு, நீதி வழங்குவதற்கு, ஆலமரத்தின் அடியில் அமர்ந்து தீர்ப்பு வழங்கினர். ஏன் ஆலமரத்தடியில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன? இதற்கு என்ன காரணம் என்பது பற்றிப் பார்ப்போமா! ராமபிரான், தந்தை சொல் கேட்டு சீதா பிராட்டி, லட்சுமணனுடன் வனவாசம் சென்றார். தந்தை சக்கரவர்த்தி தசரதருக்கு, திதி கொடுக்க வேண்டிய நாள் வந்தது.

கயாவில் பிண்டம் கொடுத்தால், மூதாதையர் மோட்சம் செல்வர் என்ற ஐதீகம் உண்டு. ஆகையால், கயாவிற்கு மூவரும் வருகின்றனர். திதிக்கு தேவையான திரவியப் பொருள்கள் மற்றும் மலர்களைக் கொண்டு வருவதற்காகக் காட்டிற்கு அருகே உள்ள கிராமத்திற்கு சென்றனர். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. வெயில் தாழ்ந்த பிறகு திதி கொடுப்பது பலன் இல்லை என நம்பினர்.

தசரத சக்கரவர்த்தியும் அவர்களுடைய மூதாதையர்களும் வானத்திலிருந்து கீழே வந்து பிண்டத்தைப் பெறுவதற்காக காத்திருக்கும் காட்சி, சீதாதேவி கண்களுக்கு தென்படுகின்றது. சீதாதேவிக்கு, ஒன்றும் புரியாமல் பதற்றம் அடைந்தாள். சமயோசிதமாக, தானே பிண்டம் கொடுத்துவிடலாம் என எண்ணினாள். பல்குணி ஆற்றில் குளித்துவிட்டு, பொருள்கள் எதுவும் இல்லாததால், ஆற்று மணலையே பிண்டமாக பிசைந்து உருட்டி, ஐவரை சாட்சியாக அழைத்தாள். 1. பல்குணி ஆறு, 2. துளசி, 3. பிராமணர், 4. பசு, 5. ஆலமரம் ஆகியவற்றின் முன்னிலையில் தசரத சக்கரவர்த்திக்கு திதி கொடுத்துவிடுகின்றாள். அவரும் மன மகிழ்ந்து, மனநிறைவுடன் ஆனந்தம் அடைந்து, பிண்டத்தை ஏற்றுக் கொண்டு விண்ணுலகம் திரும்பினார். சற்றுநேரம் கழித்து, ராமரும் லட்சுமணரும் வருகின்றனர். சீதாப் பிராட்டியிடம் பிண்டம் கொடுப்பதற்கு வேண்டிய பொருள்களை கொண்டு வந்துவிட்டோம்.

எல்லாம் தயார்நிலையில் உள்ளது. ஆகவே, திதி கொடுத்துவிடலாமா எனக் கேட்கின்றார். `நான் மாமாவிற்கு திதி கொடுத்துவிட்டேன். அதை அவர் திருப்தியுடன் ஏற்று ஆனந்தமடைந்து, பூரண நிறைவோடு, மருமகளே! நீ கொடுத்த பிண்டத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டோம். இனி இந்த தலத்தில், பெண்கள் யாரும் தங்களுடைய மூதாதையருக்கு பிண்டம் கொடுத்து, திதி செய்யலாம். அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு மோட்சமடைவர் என வாழ்த்தி மோட்ச லோகம் திரும்பினார்’ என்ற செய்தியை, ராமரிடம் கூறினாள். அவள் கூறியதைக் கேட்டு, அன்பின் சின்னமான, பண்பின் சிகரமான ராமர் முகம் கடுகடுப்பு அடைகின்றது.

`என்ன..! என் தந்தைக்குப் பிண்டம் கொடுத்தாயா? அதை அவர் ஏற்றுக் கொண்டாரா? பெண்கள் பிண்டம் கொடுக்கலாமா? இது முறைகேடு அல்லவா? சாஸ்திர தர்மம் இடம் தருமா?’ என்று பல வினாக்கள் கேட்டார். மேலும், `என் தந்தை, நீ செய்த திதியை ஏற்றுக்கொண்டார் என்பதற்கு யார் சாட்சியாக உள்ளனர்? யவரேனும் இருக்கிறார்களா? என்று ராமர் கேட்டார். `முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. அவரே விரும்பி ஏற்றுக் கொண்டார். அதற்கு சாட்சியாக ஐவர் உள்ளனர்’ என்றார் சீதை. `இவைகளெல்லாம் உண்மை என்றால், சாட்சியாக அந்த ஐவரையும் அழைத்து வா…’ என்று கூறினார், ராமர்.

சீதா பிராட்டி, பல்குணி ஆற்றினிடம் சென்று, `பல்குணி ஆறே! பல்குணி ஆறே! நான் என் மாமனாருக்கு திதி கொடுத்தது உண்மைதானே? என்று கேட்கிறாள். ராமர், சீதையின் அருகிலேயே இருந்தார்.`நான் ஓடுவதில் கவனமாக இருந்ததால், நீ திதி கொடுத்ததைக் கவனிக்கவில்லை’ என்று பல்குணி ஆறு கூறியது. அடுத்து பிராமணனிடம் சென்று, `பிராமணனே! உன் முன்னிலையில் என் மாமனார் சக்கரவர்த்தி தசரதருக்கு பிண்டம் தந்தேன் அல்லவா! நீ.. அதனை ராமரிடம் அந்த தகவலை உரைப்பாயாக’ என்று கேட்டாள்.

ராமனைக் கண்டவுடன், பிராமணனுக்கோ தன்னையறியாமல் ஒரு விதமான பயம் பற்றிக்கொண்டது. அதனால், அந்த பிராமணரும் மௌனம் சாதித்தார்.பின்பு, துளசி செடியிடம் சென்று `என் மாமனாருக்கு பிண்டம் வழங்கினேன், நீ.. அதனை கவனித்தாய் அல்லவா! ராமரிடம் உண்மையை கூறு’, என்று சீதை கேட்டாள். துளசிச் செடியும் ராமரிடம் சென்று பேச பயப்பட்டது. அதனால், துளசி செடியும் மௌனம் சாதித்தது.

மனம் உடைந்த சீதாபிராட்டி, `பசுவிடம் சென்று பசுவே..! பசுவே..! அயோத்தி மன்னருக்கு நான் பிண்டம் கொடுத்தேன். அதனை, அவர் ஏற்று மோட்சத்திற்கு சென்றார் அல்லவா! அதனை நீ பார்த்துக் கொண்டுதானே இருந்தாய்! நீயே.. அந்த உண்மையை ராமபிரானிடம் கூறு’ என்றாள். நம்மைவிட மேன்மையில் சிறந்து விளங்கும் அனைவரும் மௌனம் காக்கும் போது, நாம் மட்டும் எப்படி ராமரிடத்தில் உண்மைகளை கூறுவது? என மனதில் நினைத்துக்கொண்ட பசு, பதில் ஏதும் தராமல் தலைகுனிந்து மௌனம் சாதித்தது.

நான்கு பேரும் தனக்குச் சாட்சி கூற முன் வராததால், மேலும் மனம் உடைந்து வருந்தினாள். இறுதியில் சீதாதேவி, ஆலமரத்தின் அருகே சென்று, `ஆலமரமே! சக்கரவர்த்தி திருமகன் ராமபிரானின் தந்தைக்கு, நான் பிண்டம் கொடுத்து, அவர் மகிழ்ந்த உண்மை நிகழ்வை நீயாவது ராமபிரானிடம்கூறு’ என்று கேட்டாள்.ஆலமரம், பக்தியோடு ராமபிரானை நோக்கி வணங்கி, `அன்னை சீதாப் பிராட்டி அயோத்தி சக்கரவர்த்தி தசரதருக்கு பிண்டம் கொடுத்து உண்மை. தசரதமன்னர், மனநிறைவோடு சீதாபிராட்டி வழங்கிய பிண்டத்தைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு, உங்கள் குடும்பத்தை வாழ்த்தி, அவர் மோட்சத்திற்கு திரும்பினார்’’ என்ற உண்மைச் செய்தியை கூறியது. இருந்தபோதிலும், ஆலமரத்தின் சாட்சியை ஏற்றுக் கொள்ள ராமரின் மனம் இடம் தரவில்லை. ஆகவே, நால்வர் சாட்சி கூறாமல் மௌனம் சாதித்ததால் உள்ளம் அமைதி கொள்ளாமல், தவித்தது.

கடகடவென தந்தைக்கு பிண்டம் கொடுக்க தயாரானார். தந்தையை அழைத்து பிண்டத்தை ஏற்றுக்கொள்ள கூறினார். விண்ணுலகத்திலிருந்து தசரதர், பூவுலகிற்கு எழுந்தருளி, `இப்பொழுதுதானே சீதா கொடுத்தாள். மீண்டும் நீ.. வேறு தனியாக கொடுப்பாயா? சீதை கொடுத்ததையே நான் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு மோட்சம் சென்றேனே… நீ.. தற்போது மீண்டும் கொடுக்கும் திதியினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’’. என மறுத்து மீண்டும் தசரதர் மோட்சலோகம் சென்றார். ராமபிரான் தந்தை கூறியதைக் கேட்டு ராமர், ஆனந்த சந்தோசமடைந்தார். மனம் வருந்திய ராமர், சீதாதேவியிடம் மன்னிப்பு கேட்டாள்.

தனக்கு சாட்சி கூறாமல் மௌனம் சாதித்த நால்வரையும் சபித்தாள். `பல்குணி ஆறே! நீ.. நீரின்றி வற்றிய நிலையில் காணப்படுவாய்.`துளசிச் செடியே, நீ.. விஷ்ணுவிற்கு மிகவும் உகந்தவள். எனக்கு உண்மையைக் கூறவில்லை. விஷ்ணுதளமான இந்த இடத்தில் நீ.. வளரவே மாட்டாய். இம்மண்ணில் உன்னுடைய நிழல்கூட இருக்காது’ என்று சபித்தாள்.`பிராமணரே.. ராமரிடத்தில் பயம் கண்டதால் மௌனம் சாதித்தாய் அல்லவா..

அது நல்ல செயலாக இருந்தாலும், தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்யாதமைக்காக இன்று முதல் இந்த கயாவில் வாழக்கூடிய பிராமணர்கள், பிறரிடம் யாசகமாக கையை நீட்டியே உங்கள் வித்தையான வேதத்தை விற்பனை செய்து, அதன் மூலம் பணம் பெற்று, உங்களுடைய வாழ்க்கை ஜீவிதம் செய்ய இயலும்’’. என்றும் சபித்து,பசுவிடம் சென்று, `பசுவே! உண்மையை கூறாமல் மௌனம் சாதித்தாய் அல்லவா.. எந்த வாயால் நீ.. உண்மையை கூறவில்லையோ, அந்த வாய் இருக்கும் பக்கம் உனக்கு எப்பொழுதும் பூஜைகள் இல்லை. உன்னுடைய பின்புறமான கோமியம் இருக்கும் இடத்தில்தான் மக்கள் உனக்கு தீபாராதனைக் காட்டி மஞ்சள், குங்குமமிட்டு வணங்குவார்கள்’’ என்று சபித்தாள் சீதை.

அதன்பிறகு, ஆலமரத்தின் அருகே சென்ற சீதை, `ஆலமரமே.. நீ மட்டும்தான் தக்க சமயத்தில் உண்மையைக் கூறினாய். ஆதலால், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். நான் தருகிறேன்’ என்றாள். `தாயே! சீதாம்மா.. எனக்கு ஒன்றும் வேண்டாம். மக்கள் எங்கே எந்த பிரதேசத்தில் இருந்தாலும், எந்த ஊரில் இருந்தாலும், அவர்கள் திதி கொடுக்கும் பிண்டத்தை வைத்து மூதாதையர்களை அழைக்கும் பொழுது கயாவில் இருக்கும் ஆலமரத்தின் சாட்சியாக, `கயா.. கயா.. கயா.. என்று என்னுடைய பெயரைக் கூறி அவர்கள் சிரார்த்தம் பிண்டம் வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் என்னுடைய உள்ளமும் மகிழ்ந்து அவர்களுடைய மனம் குளிர்ந்து மோட்சலோகம் செல்வார்கள். இதுவே என்னுடைய கோரிக்கை. இதுவே என்னுடைய ஆசை’ என்று மனம்விட்டு கூறியது. `அப்படியே ஆகட்டுமென்று’, சீதாதேவியும் அருளாசி வழங்கி வாழ்த்தினாள். உண்மையான சாட்சியைக் கூறிய ஆலமரத்தை, சீதாதேவி வளமுடன் வாழ்ந்து, மக்களுக்கு நல்லருள் தந்து, வாழ்த்த வேண்டும். என்றும் வாழ்த்தினாள்.

ஆகவே, முழு மனதுடன் நாம் செயல்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் சிறந்த பலன் கிடைக்கும். இந்த ஆலமரத்தைப் போல, நம் குடும்ப வம்சவிருத்தி வளர்ந்து தழைத்து ஓங்கி வளமடையவும், இந்த ஆலமரம் காரணமாக இருப்பதால், எல்லோருடைய உள்ளத்திலும் மகிழ்ச்சியை தரும் என்பது உறுதி. ஏன் நால்வரும் சீதாதேவிக்கு சாட்சி கூற முன்வரவில்லை என்று யோசிக்க வைக்கிறது. ராமச்சந்திர மூர்த்தியின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. ஆனால், ஆலமரம் நடுநிலைமையோடு இருந்ததால், சிறப்பு கிடைத்தது. இன்றும் கிராமப்புறங்களில் ஆலமரத்தடியில் தீர்ப்பு வழங்குவதற்கு, இதுவே காரணமாக அமைந்தது.

தொகுப்பு: பொன்முகரியன்

The post ஆலமரத்தை சாட்சியாக அழைப்பது ஏன்? appeared first on Dinakaran.

Tags :
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?