×

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரை இழந்தது; இந்திய அணி எளிதில் வீழ்த்தி விட கூடிய மிக மிக சாதாரண அணியாகி விட்டது: மாஜி வேகம் வெங்கடேஷ் பிரசாத் சாடல்

புதுடெல்லி : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் லாடெர்ஹில் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

இதுகுறித்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில், ‘கடந்த சில காலமாக ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் எளிதாக வீழ்த்தி விட கூடிய மிக மிக சாதாரண அணியாக இந்தியா மாறியுள்ளது. ஒரு நாள் உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெற தவறிய மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியை தழுவியிருக்கிறோம். வங்கதேசத்திடம் ஒரு நாள் தொடரில் வீழ்ந்திருக்கிறோம். இதற்கு ஏதேனும் அறிக்கை விடுவதற்கு பதிலாக, அணி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளும் என நம்புகிறேன்.

ஒருநாள் உலக கோப்பைக்கு மட்டுமல்ல; கடந்தாண்டு டி20 உலக கோப்பை போட்டிக்கும் தகுதிபெற தவறிய அதே மேற்கிந்திய தீவுகளிடம் இந்திய அணி தொடரை இழந்தது கவலையளிக்கிறது. இந்திய அணியிடம் முன்பிருந்த வெற்றிக்கான வேட்கை, தீவிரத்தன்மை இருப்பதாக தெரியவில்லை. அணியினர் கற்பனை உலகில் இருப்பதாக தெரிகிறது. டி20 அணியின் கேப்டன் (ஹர்திக் பாண்டியா) தெளிவான திட்டத்துடன் இருப்பதாக தெரியவில்லை. வீரர்கள், தங்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும். பொருத்தமான நபருக்கு பதிலாக, பிடித்த நபரை அணியில் வைத்திருப்பது சரியல்லை. மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான தோல்விக்காக கேப்டன் ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டே பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.

The post வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரை இழந்தது; இந்திய அணி எளிதில் வீழ்த்தி விட கூடிய மிக மிக சாதாரண அணியாகி விட்டது: மாஜி வேகம் வெங்கடேஷ் பிரசாத் சாடல் appeared first on Dinakaran.

Tags : West Indies ,India ,Venkatesh Prasad Chatal ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...