×

பலவீனம் அடையும் கர்நாடக பாஜ: கட்சி தாவும் எம்எல்ஏக்கள்

  • முட்டுக்கொடுக்கும் முன்னணி நடிகர்கள்

கர்நாடக மாநிலத்தின் 16வது சட்டப்பேரவை பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப். 13ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதல் கட்ட பட்டியலில் 124 வேட்பாளர்களும் இரண்டாவது கட்ட பட்டியலில் 42 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பட்டியலில் மீதியுள்ள 58 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். ஆளும் பாரதிய ஜனதா கட்சி விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் 93 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியிட்டுள்ளது. இது தவிர ஆம்ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

வாக்குறுதிகள் அள்ளி வீசும் கட்சிகள் மாநில சட்டபேரவை தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் காங்கிரஸ் சார்பில் முதல் கட்டமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகை, ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம், படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவி தொகை, பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்ற நான்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளால் பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல் மஜத சார்பில் கிராமத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், முதியோர், மாற்று திறனாளிகளுக்காக மாதாந்திர உதவி தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

யாத்திரைகள் மூலம் பிரசாரம் சட்டபேரவைக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே கடந்த ஜனவரி மாதம் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. ஆளும் பாஜ சார்பில் விஜயசங்கல்ப யாத்திரை நடத்தினர். இதில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் பசவராஜ்பொம்மை, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜாநாத்சிங், நிதின்கட்கரி, நரேந்திரசிங் தோமர், பிரகலத்ஜோஷி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் நடத்திய மக்கள் குரல் யாத்திரையில் ராகுல்காந்தி, பிரியாங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ரனதீப்சிங்சுர்ஜிவாலா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் தலா 122 தொகுதிகளி்ல் மக்கள் குரல் யாத்திரை நடத்தினர். மஜத சார்பில் பஞ்சரத்னா யாத்திரை நடத்தப்பட்டது. இதில் எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் பலன் நாட்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் பலமாகவுள்ளது. ஒன்றிய மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜ அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் டி.கே.சிவகுமார் உள்பட பலர் மீது சிபிஐ, அமலாக்கப்படை, வருமான வரி்த்துறைகளை ஏவிவிட்டாலும் எதற்கும் அஞ்சாமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை எதிர்த்து நடத்திய போராட்டம் மக்களிடம் ஆதரவு பெற்றது. மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடத்திய போராட்டங்களும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது.

ஆளும் பாஜ அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதுடன் அரசு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் அரசு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்கும் பிரச்னையை பூதாகரமாக்கியது. இந்த விஷயத்தில் ஆளும் கட்சி மீதான குற்றச்சாட்டு மக்களிடம் பாஜ மீது வெறுப்பு ஏற்படுத்தும் நிலையை எட்டியது. இதை பொறுத்து கொள்ளாமல், காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜ தரப்பில் பல ஊழல் முறைகேடு புகார்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அது மக்களிடம் அவ்வளவாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. 40 சதவீதம் கமிஷன் புகார் ஆளும் கட்சியை நிலை குலைய செய்துள்ளது என்பதில் மாற்று கருத்தில்லை. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள் என பலர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதும் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.

கருத்து கணிப்பில் சாதகம் கடந்த மூன்று மாதங்களி்ல் டெல்லி, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட மாகநரங்களில் இயங்கி வரும் சி-ஓட்டர் உள்பட 13 கருத்து கணிப்பு நிறுவனங்கள் நடத்தி வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகளில் 9 நிறுவனங்கள் காங்கிரஸ் 120 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா 110 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனம் எந்த கட்சிக்கும் பெருபான்மை பலமில்லாமல் தொங்கு பேரவை உருவாகும் என்றும், மற்றொரு நிறுவனம் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு கூடி வருவதால், அக்கட்சி ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளது.

பெங்களூரு உள்பட மாநிலத்தில் பிற மாநகரங்களில் இயங்கிவரும் வெப் டிவி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் தேர்தல் கருத்து கணிப்புகள் கூட பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்த கருத்து கணிப்புகளை உற்சாக டானிக்காக எடுத்து கொண்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும் தீயாக வேலை செய்ய தொடங்கி இருப்பதுடன் வீட்டுக்கு வீடு காங்கிரஸ் என்ற திட்டத்தின் படி கட்சி கொடுத்துள்ள நான்கு வாக்குறுதிகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பல சட்டபேரவை தொகுதிகளி்ல் பாஜ தொண்டர்கள் திணறி வருவதையும் காண முடிகிறது.

தத்தளிக்கும் பாஜ, மஜத கர்நாடக மாநில தேர்தல் வரலாற்றில் ஒவ்வொரு பொது தேர்தலின் போதும் மக்கள் பிரதிநிதிகள், மூத்த கட்சி தலைவர்கள் கட்சி மாறுவது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியபோது, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏகள் பாஜவில் இணைவார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜ தலைவர்கள் வெளிப்படையாக கூறி வந்தனர். அதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதிலடி கொடுத்தபோது, ஆளும் பாஜ மற்றும் மஜத கட்சிகளில் இருந்த தான் காங்கிரஸ் கட்சிக்கு வருவார்களே தவிர, எங்கள் கட்சியில் இருந்து யாரும் பாஜவுக்கு போகமாட்டார்கள் என்று தெரிவித்தார். அதை உறுதி செய்யும் வகையில் கடந்த ஒரு மாதமாக பாஜ மற்றும் மஜத கட்சியில் இருந்து பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். பல்லாரி மாவட்டம், கூட்லகி தொகுதி பாஜ எம்எல்ஏவாக இருந்த என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, தனது பதவியை ராஜினாமா செய்தபின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் தேர்தலில் முளகல்மூரு தொகுதியி்ல் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜ மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்துள்ள பாபுராவ் சிஞ்சனசூருக்கு கல்புர்கி மாவட்டம், குருமிட்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

துமகூரு மாவட்டம், குப்பி சட்டபேரவை தொகுதி மஜத உறுப்பினராக இருந்த எஸ்.ஆர்.சீனிவாஸ், பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். அவருக்கு மீண்டும் குப்பி தொகுதியி்ல் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. சித்ரதுர்கா தொகுதி மஜத எம்எல்ஏ வீரேந்திரா பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். அவருக்கு சித்ரதுர்கா தொகுதியி்ல் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டம், மேல்கோட்டை தொகுதி சர்வோதய கர்நாடக கட்சி எம்எல்ஏவாக இருக்கும் தர்ஷன் புட்டணையா, அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவருக்கு மீண்டும் மேல்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ல் நடந்த தேர்தலில் கோலார் மாவட்டம், முல்பாகல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பாஜ ஆட்சியில் அமைச்சராக இருந்த எச்.நாகேஷ், பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவருக்கு மகாதேவபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையி்ல் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சிவலிங்ககவுடா (சக்லேஷ்புரா), சீனிவாஸ்கவுடா (கோலார்), ரமேஷ் பண்டிசித்தனகவுடா (ரங்கபட்டண) மற்றும் பாஜ மேலவை உறுப்பினர் ஆயனூர் மஞ்சுநாத் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இரண்டொரு நாளில் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளனர். அதே சமயத்தில் அரகலகூடு தொகுதி மஜத எம்எல்ஏவாக இருந்த ஏ.டி.ராமசாமி, பாஜவில் இணைந்துள்ளார்.

பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், கோலார், மைசூரு, கல்புர்கி, யாதகிரி, பாகல்கோட்டை, பெலகாவி, கதக், கொப்பள், தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பாஜ மற்றும் மஜத சார்பில் கவுன்சிலர்களாக இருப்பவர்கள் அலை அலையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். பாஜவில் இருந்து மேலும் சில எம்எல்ஏகள் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய விக்கெட்களை வீழ்த்த பாஜ மேற்கொண்டுவரும் முயற்சி தோல்வியில் முடிந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதை பார்க்கும்போது காங்கிரஸ் பலம் பெற்று வருவதும் பாஜ பலவீனமடைந்து வருவதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

நடிகர்கள் பிரசாரம் கர்நாடகாவில் பாஜ பலவீனமாகி வருவதால் முட்டுக்கொடுக்க செல்வாக்கான பிரபல நடிகர்களை பிரசாரத்துக்கு இழுக்கும் யுக்தியை பாஜ அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி முதல்வர் பசவராஜ் பொம்மை நடிகர் சுதீப் கிச்சாைவ பாஜவுக்கு பிரசாரம் செய்ய அழைத்துவந்துள்ளார். இதே போல் நடிகர் தர்ஷனை அழைத்து வர பேச்சுவார்த்தை நடக்கிறது. நடிகர் சுதீப் பாஜவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒப்புக்கொண்டதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார். தோல்வியடையும் கட்சிக்காக நீங்கள் பிரசாரம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

  • பாஜவின் பின்னடைவுக்கு காரணம்? நாட்டில் கட்டுபாடுடன் இயங்கும் கட்சி என்ற பெருமை பாரதிய ஜனதாவுக்கு உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக எந்த பிரச்னையை கையில் எடுத்தாலும், தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒரே மாதிரி விமர்சனம் செய்வார்கள். ஒரே நோக்கத்தில் போராட்டம் நடத்துவார்கள். இப்படி கட்டுகோப்புடன் இருக்கும் பாஜவில் தற்போது ஏற்பட்டு வரும் விரிசல், கட்சியின் அடிதளத்தை ஆட்டம் காண செய்து வருகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டது, வயதை காரணம் காட்டி அவரை தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுகொடுத்துள்ளது முக்கிய காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும் கடந்த இரண்டாண்டுகளாக எடியூரப்பாவி்ன் ஆதரவாளர்கள் சத்தமில்லாமல் புறகணிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளவர்கள் பலரும் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகவுள்ளது.
  • இடஓதுக்கீடு அறிவிப்பு மாநிலத்தில் முன்னேற்றிய வகுப்பினர் முதல் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் வரை பலரும் தங்கள் வகுப்பிற்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். நீதிபதி நாகமோகன்தாஸ் கமிஷன் கொடுத்த அறிக்கை ஏற்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் இடஒதுக்கீடு 18ல் இருந்து 24 சதவீதமாக உயர்த்தப்பட்டது. நீதிபதி சதாசிவ கமிஷன் சிபாரிசு ஏற்று தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள உட்பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் கொடுத்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாக வைத்து பஞ்சமசாலி மற்றும் ஒக்கலிக வகுப்பினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் இடஒதுக்கீட்டால் வஞ்சிக்கப்பட்ட பிற வகுப்பினர் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
  • காங்கிரசில் முதல்வர் வேட்பாளர் கருத்து மோதல் ஆளும் கட்சி மீது மக்கள் பல வழிகளில் அதிருப்தி கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தாலும் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகிய இரு இரட்டை குழல் துப்பாக்கிகள் இருப்பதும், இதில் யார் அதிகாரம் படைத்தவர் என்பதும், கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால், யார் முதல்வராவார் என்ற கருத்து மோதல், காங்கிரஸ் தொண்டர்கள் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக இரு தலைவர்களின் ஆதரவாளர்கள் மீடியாக்கள் முன் சர்ச்சையான கருத்துகள் தெரிவிப்பதும் பின்னடைவு ஏற்படுத்தி வருகிறது.
  • ஓவைசி கட்சி போட்டி கர்நாடக மாநில தேர்தலில் ஓவைசி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது. 5 வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்துள்ளது. ஆனால் ஓவைசி பாஜவின் ‘பி’ டீம் என்றும் சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜ அரசு ரத்து செய்ததால் முஸ்லீம் சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளார்கள். இதனால் தங்களுக்கு இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்காது என்று தெரிந்து கொண்ட பாஜ இஸ்லாமியர்கள் வாக்குகளை பிரிப்பதற்காகவே திட்டமிட்டு தேர்தலில் ஓவைசி கட்சியை இறக்கியுள்ளார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இதை ஓவைசி உறுதியாக மறுத்துள்ளார்.

The post பலவீனம் அடையும் கர்நாடக பாஜ: கட்சி தாவும் எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,16th Legislative Assembly of ,
× RELATED கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே...