தெலங்கானா தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் ‘அதிருப்தி’ சுயேச்சை வேட்பாளர்கள்: முக்கிய கட்சிகள் கலக்கம்


திருமலை: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 199 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி தனித்தும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்தும் போட்டியிடுகிறது. பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஜனசேனா கட்சிக்கு 8 இடங்களை வழங்கிய பாஜ மற்ற இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களில் தனித்துப் போட்டுயிடுகிறது. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சி, தெலங்கானா போராட்ட குழுவினர், சுயேச்சைகள் என பலர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜ கட்சிகளில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சை வேட்பாளர்களாக பல தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்கள் வாக்குகளை பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் முக்கிய கட்சிகள் மத்தியில் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அதனால் ஒரு வாக்குகள் கூட பிரிந்து போகக் கூடாது என முக்கிய கட்சிகள் எண்ணுகின்றன. தெலங்கானா தேர்தலில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது. ஆனால், இந்த 3 கட்சிகளை தவிர, அதிருப்தி சுயேச்சை வேட்பாளர்கள், தெலங்கானா போராட்ட ஆதரவாளர்கள், விவசாயிகள், சுயேச்சை வேட்பாளர்கள், தெலங்கானா இயக்கத்தில் பங்கேற்றவர்கள் என பலரும் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

இதில் சில இடங்களில் அதிருப்தி சுயேச்சை வேட்பாளர்களும், சில இடங்களில் மார்க்சிஸ்ட், பிஎஸ்பி போன்ற கட்சிகளின் வேட்பாளர்களும், சில இடங்களில் தெலங்கானா போராட்ட கிளர்ச்சி வேட்பாளர்களும் வாக்குகளை பிரிப்பார்கள் என்று உறுதியாக தெரிகிறது. இதனால் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அதிருப்தி சுயேச்சை வேட்பாளர்களை சரிகட்டும் முயற்சியில் இந்த கட்சித் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

The post தெலங்கானா தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் ‘அதிருப்தி’ சுயேச்சை வேட்பாளர்கள்: முக்கிய கட்சிகள் கலக்கம் appeared first on Dinakaran.

Related Stories: