×

இந்த வார விசேஷங்கள்

21.9.2024 – சனி மஹாபரணி

மஹாபரணி என்பது மஹாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்கள் எல்லாம் அவரவர் கர்ம வினைக் கேற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதியாகும். யமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிராத்தம், திதிகள், தர்ப்பணம் செய்வது மற்றும் யம தீபம் ஏற்றுவ து போன்றவைகளை செய்தால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்லவேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம்.

21.9.2024 – சனி
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருவண்ணாமலை
ஸ்ரீநிவாச பெருமாள்
கருட வாகனம்

தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படும் மலைக்கோயிலான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இந்த திருவண்ணாமலை கோவில் ‘யானை கால் நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றமுள்ள மலை’ மீது ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை 350 படிக்கட்டுக்களுக்கு மேல் அமைந்துள்ளது. படிக்கட்டுக்கள் மேல் வெயிலுக்காக மேற்கூரை கற்பலகைகள் பரப்பி அமைக்கப்பட்டுள்ளது.இது சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. படிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வயதான பக்தர்கள், ரத்த அழுத்த, இருதய நோய் உள்ளவர்கள் படி ஏறுவது சிரமம் என்பதால் ஏறும் தூரத்தை கணக்கிட்டு பிரித்து இடையில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல மூன்று மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னதிக்கு முன்பு கருடாழ்வார் இருக்கிறார். ஸ்ரீநிவாசப் பெருமாள் நின்ற கோலம்; கிழக்கு பார்த்த கோலம்; நன்கு உயரமாக, ஆஜானுபாவமான தோற்றம். காணக் கண்கோடி வேண்டும். ஆரத்தி எடுக்கும்போது பார்த்தால் பெருமாள் நம்மைப் பார்த்து புன்னகை புரிவது போன்ற தோற்றம். நேரில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். திருப்பதி பெருமாளை விட உயரம் மிக அதிகம். மிகவும் கம்பீரம். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நல்ல கூட்டம் இருக்கும், மற்ற மாதாந்திர சனிக்கிழமைகளிலும் நல்ல கூட்டம் இருக்கும். எல்லா சனிக்கிழமைகளிலும் வரும் பக்தர்கள் இருக்கிறார்கள். சனிக்கிழமைகளில் காலை ஐந்து மணிக்கு சன்னதி திறந்து விடுவார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு தொடர்ந்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இன்று இந்தத் தலத்தில் பெருமாள் கருட சேவை.

23.9.2024 – திங்கள்
கபில சஷ்டி

கபில சஷ்டி என்பது கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) அனுசரிக்கப்படும் ஒரு நல்ல நாள். இது புரட்டாசி மாசம் அனுசரிக்கப்படுகிறது. இன்று புனித நதிகளில் நீராடுவது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. அன்று நாரத முனிவர் தெய்வீக நிலையை அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்குக் கபிலை என்பது பசுவைக் குறிக்கும். தொல்காப்பியரின் இந்தத் தொடர் கோதானத்தைக் குறிப்பிடுகிறது. வெண்மையும் செம்மையும், வெண்மையும் கருமையும், கருமையும் செம்மையும் என்று நிறம் கலந்த தோற்றம் கொண்ட பசுக்களைக் கபிலைப்பசு என்பது நாட்டுப்புற வழக்கு. இந்த கபில சஷ்டி நாளிலே, பசுவை அலங்காரம் செய்து வணங்க வேண்டும். அதன் மூலமாக, பற்பல நற்பலன்களும், பாங்கான நல்வாழ்வும் கிடைக்கும். பொதுவாக கோ பூஜை செய்ய வேண்டிய நாள் இன்று.
பசுவுக்கு சாப்பிடுவதற்கு கீரையோ பழமோ கொடுத்து வணங்குங்கள்.

23.9.2024 – திங்கள் நந்தனார் குரு பூஜை

திருநாளைப்போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும்மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவர் ஆவார் தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஆதனூரில் பிறந்தவர். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிறிவார் என்பன கொடுப்பார். அர்ச்சனைக்காக கோரோசனை கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார். ஒருநாள் திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார். வாயிலினின்று இசைபாடி நின்றார். அப்பொழுது பெருமானை நேரில் கும்பிட வேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்க்க பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். தில்லைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. ஆசை அளவின்றிப் பெருகவே “நாளை போவேன்” என்று கூறி நாட்களைக் கழித்தார். ஒருநாள் தில்லைத் திருத்தல எல்லையைச் சென்று சேர்ந்தார். ‘‘வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’’ என்று கை தொழுது வலங்கொண்டு சென்றார். இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை வீதிவலம் வந்தார் நந்தனாரது வருத்தத்தை நீக்கியருளத் திருவுளங்கொண்ட தில்லைக் கூத்தபெருமான், கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி தில்லைவாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினார். இறைவன் உளக் குறிப்புப்படியே வேள்வியில் புகுந்து பெருமான் திருவடிப் பேறடைந்தார். அவர் குருபூஜை இன்று.

24.9.2024 – செவ்வாய் சம்புகாஷ்டமி

புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி சம்புகாஷ்டமியாக கடைப்பிடிக்கப்படுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்தமனத்தில் கால பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமிக்கு ஒவ்வொரு பெயர் உண்டு.அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரகப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகளில் தெய்வீகக் காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை. ‘சம்பு’ என்றால் சிவபெருமானைக் குறிக்கும். நாவல் மரங்களையும் குறிக்கும். நாவல் மரங்கள் நிறைந்த திருவானைக்கோயிலில் உள்ள ஈசனுக்கு சம்புகேஸ்வரர் என்று பெயர். இன்பத்தைத் தருபவன் என்றும் பொருள் இருக்கிறது. சம்பு என்பதற்கு சூரியன் என்ற ஒரு பொருளும் உண்டு. இந்த அஷ்டமி சம்புவின் தினமான ஞாயிற்றுக்கிழமை வருவது சிறப்பு. ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இன்று அஷ்டமி விரதம் இருந்தால் ஆயுள்தோஷத்தை நீக்கும். அஷ்டமி திதியில் ஸ்ரீபைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்
தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் அனைத்தும் அகலும்.

25.9.2024 – புதன்
திருவண்ணாமலை
இடைக்காடர் சித்தர்

திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதேஅளவுக்கு முக்கியமானது, இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவசமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார். திருவண்ணாமலை ஆலயத்தில் 6-வது பிராகாரத்தில் பிரம்மலிங்கம் பின்புறம் சுற்றுச்சுவரில் ஒரு பெரிய குகை போன்ற அமைப்பு உள்ளது.7 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட அந்த இடம்தான் இடைக்காடர் சித்தர் ஒளிசமாதி பெற்ற இடமாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த இடம்தான் இடைக்காடரின் ஒளிசமாதி அமைந்து இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லத் தொடங்கி உள்ளனர். இந்த இடத்துக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர். திருவண்ணாமலை பெரிய தெருவில் இடைக்காடர் சித்தர் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இடைக்காடர் சித்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே, திருவாதிரை தினத்தன்று பலரும் அங்கு வந்து வழிபடுவதை காணலாம். சமீபகாலமாக திருவாதிரை நட்சத்திரக்காரர்களும் இங்கு தேடிவந்து வழிபடுகிறார்கள்.

26.9.2024 – வியாழன்
அவிதவா நவமி

மகாளய பட்ச காலத்தில், நவமி திதியும் வரும். இந்த நவமி திதியை, அவிதவா நவமி என்று பெயர். அவிதவா என்றால் கணவருடன் இருக்கும் சுமங்கலி என்று அர்த்தம். அதாவது சுமங்கலிகளுக்கு உரிய நன்னாள். இந்தநாளில் வழக்கம் போல், பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும். மேலும் சுமங்கலிப் பெண்கள் எவருக்கேனும் புடவை ஜாக்கெட் வழங்குங்கள். இதனால் பித்ருக்களின் ஆசீர்வாதமும் சுமங்கலியாக இறந்துவிட்ட பெண் களின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெறலாம்

26.9.2024 – வியாழன்
குருவித்துறை குருபகவான் சிறப்பு வழிபாடு அபிஷேகம்

மதுரையிலிருந்து 35 கிமீ தொலைவில் சோழவந்தான், அடுத்து உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள், சித்திரங்கள் வரையப்பட்ட ரதம் (தேர்) ஒன்றில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சி கொடுத்தார் என்பதால் இந்தப் பெருமாளுக்கு சித்திர ரத வல்லப பெருமாள்’ என்று திருநாமம் ஏற்பட்டது. இந்தப் பெருமாளுக்கு இந்தத் திருநாமத்தைச் சூட்டியவரே குரு பகவான்தான் என்கிறது தல புராணம். குருபகவான் தன் மகன் கசனுக்காக நாராயணனை நோக்கி தவம் செய்த இடம்தான் குருவித்துறை. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குரு பகவான் சுயம்புவாக இந்த கோவிலில் வீற்றிருக்கிறார். குரு வீற்றிருந்த துறை’ என ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்டது இந்தத் தலம். பின்னாளில் இதுவே மருவி, ‘குருவித்துறை’ ஆனது என்கிறார்கள். இங்கே குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். இன்று குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

21. 9. 2024 – சனி – புரட்டாசி முதல் சனிக்கிழமை.
22. 9.2024 – ஞாயிறு – கார்த்திகை.
22.9.2024 – ஞாயிறு – திருவிடைக்கழி முருகன் அபிஷேகம்.
23.9.2024 – திங்கள்- கீழ் திருப்பதி கருடனுக்கு திருமஞ்சனம்.
25.9.2024 – புதன் – திருவண்ணாமலை இடைக்காடர் சித்தர்
25.9.2024 – புதன் – திருவாதிரை ஸ்ரீபெரும்புதூர் உடையவர் மாமனிதர் புறப்பாடு.
26.9.2024 – வியாழன் – பத்ராசலம் ஸ்ரீராமபிரான் உற்சவம்
27.9.2024 – வெள்ளி – சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தங்கப்பாவாடை.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sani Mahaparani Mahaparani ,Mahalaya ,Yamadarma Rajan ,Yamatarman ,
× RELATED பாபநாசத்தில் ஆடி அமாவாசையில்...