×

விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிரங்கும் நிகழ்வை பார்க்க நாடே ஆவலுடன் காத்திருக்கிறது: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி: விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிரங்கும் நிகழ்வை பார்க்க நாடே ஆவலுடன் காத்திருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவியது.

விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிலவில் தரையிரங்கிய பின்னர் நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வருகிற 23ம் தேதி சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது. திட்டமிட்டபடி சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிரங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. வழக்கமான சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாகவும், விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதேபோல் நிலவில் இந்து 60 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தநிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்குவது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிறங்குவது நாட்டுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

The post விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிரங்கும் நிகழ்வை பார்க்க நாடே ஆவலுடன் காத்திருக்கிறது: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்! appeared first on Dinakaran.

Tags : Vikram Lander ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Chief Minister Arvind Kejriwal ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...