×

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்வதற்காக தீவுத்திடல் முதல் கோயம்பேடு வரை நெரிசல் இன்றி போக்குவரத்து மாற்றம்: சிறப்பான பணிக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் முழு அரசு மரியாதையுடன் வைக்கப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் தடையின்றி வந்து செல்லும் வகையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 750க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர். தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகம் வரையிலான 10.8 கிலோ தொலைவுக்கு விஜயகாந்த் உடல் வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கூடுதல் கமிஷனர் அஸ்ராக் கார்க், பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பகுதியை ஊர்வலத்திற்காக பொது போக்குவரத்து மாலை 3 முதல் 6 மணி வரை தடை செய்யப்பட்டது. கோயம்பேடு பகுதியில் இருந்து பிராட்வே செல்லும் வாகனங்கள் அனைத்தும், தடையின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் சாலைகளில் சில இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

ஊர்வலம் செல்ல செல்ல ஒவ்வொரு சிக்னல்களில் பொது வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு போலீசார் ஊர்வலம் செல்லும் சாலை முழுவதும் சாலையின் இருபுறங்களில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். போலீசாரின் சிறப்பான பணியால் விஜயகாந்த் உடல் எந்த சிறு தடைகளும் இன்றி அடைக்கம் செய்யப்பட்ட தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் போலீசாரின் பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

The post விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்வதற்காக தீவுத்திடல் முதல் கோயம்பேடு வரை நெரிசல் இன்றி போக்குவரத்து மாற்றம்: சிறப்பான பணிக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Island ,Koyambedu ,Vijayakanth ,CHENNAI ,DMD ,Sandeep Roy Rathore ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்:...