×

வெற்றி தரும் பெரிய நாயகி அம்மன்

வெற்றிதரும் தரும் காரைக்குடி வேலங்குடி வயநாச்சி மற்றும் பெரியநாயகி அம்மனை வழிபட்டு வருவோம்.

தல வரலாறு: பலநூற்றாண்டுகளுக்கு முன்பு பாலையநாட்டு மக்கள், வள்ளல் பாரியின் நினைவாக வேட்டை ஆடும் வழக்கம் இருந்தது. ஒருமுறை முயல் ஒன்று சிலரது கண்ணில் பட்டது. அதைப்பிடிக்க முயன்றபோது, பாலைமரப் பொந்தில் நுழைந்தது. வேலங்குடியைச் சேர்ந்த ஒருவர் வேல் மற்றும் அம்பு கொண்டு பொந்தில் குத்தினார். உள்ளிருந்து கணீர்! கணீர்! என்று சப்தம் கேட்டது.

பொந்தில் கைவிட்டு பார்த்த போது, சூலாயுதத்துடன், தங்க அம்மன் சிலை இருப்பது தெரியவந்தது. அவர் சூலாயுதத்தை தன்னிடம் வைத்துக் கொண்டார். சிலையை மக்களிடம் ஒப்படைத்தார். அந்த அம்பாளை குலதெய்வமாக ஏற்ற மக்கள் “பெரியநாயகி’ என பெயரிட்டனர். தங்கள் தாய்கிராமமான பள்ளத்தூரில் கோயில் கட்டி சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

அன்றிரவில் கிழக்கு நோக்கி இருந்த அம்மன், தெற்கிலுள்ள வேலங்குடி நோக்கி திரும்பியது. அப்போது தான் சிலையைத் தங்களிடம் தந்தவர் சூலாயுதத்தை எடுத்துச்சென்று அங்கு ஒளித்து வைத்திருந்த தகவலை அறிந்தனர். பின் வேலங்குடிக்கு கொண்டு சென்று கோயில் கட்டி வழிபாடு நடத்தினர். ஊரின் நடுவிலுள்ள மூலஸ்தான கோயிலில் வயநாச்சியம்மனும், ஊருக்கு வெளியே உள்ள கோயிலில் பெரியநாயகி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

சிறப்பம்சம்: ஐவகை நிலங்களில் வறண்ட பாலை நிலத்தை “பாலை நாடு’ என்றனர். காலப்போக்கில் இது “பாலைய நாடு’ ஆனது. காரஞ்செடிகள் இங்கு நிறைந்திருந்தன. இவற்றை திருத்தி ஊராக்கியதால் “காரக்குடி’ என்றும் பின் “காரைக்குடி’ என்றும் மாறியது. பின் பாலைப்பகுதியை விளைநிலங்களாக்கி, அந்தப்பகுதியில் நிர்வாகப்பொறுப்புக்கு தலைமை ஏற்ற வர்கள் வல்லம்பர்கள். இவர்கள் “நாட்டார்’ என அழைக்கப்பட்டனர்.

அரசர்களுக்கு படைவீரர்களாக இருந்ததால் வில் அம்பு எய்துவதில் வல்லவர்கள். இதனால் வல்லம்பர் என்று பெயர் பெற்றிருந்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக பெரியநாயகியை ஏற்றனர். மூலஸ்தானத்தில் வயநாச்சி அம்மன் அருள்பாலிக்கிறாள்.”வய’ என்றால் வலிமை அல்லது வெற்றி என பொருள். எந்த செயலாயினும் பக்தர்களுக்கு வெற்றி தருபவள் இவள்.

பஞ்சாயத்து கூட்டம்: இந்தக்கோயிலில் பிடாரி என்னும் தெய்வம் உள்ளது. பீடோபஹாரி என்பதே பிடாரி என மருவியது. பீடைகளை விரட்டுபவள்’ என்பது இதன் பொருள். ஊர் பஞ்சாயத்தில் பொய்சாட்சி சொல்பவர்களை பிடாரி ஆணையாக சொல்லச் சொல்வார்கள். இதனால் சாட்சி சொல்பவர்கள் நடுங்குவார்கள். வேலங்குடியில் ஓரம் (பொய்சாட்சி) சொன்னவன், இரவு தங்கமாட்டான் என்ற சொல் வழக்கும் உள்ளது.

குளிக்காத ஊருணி: வயநாச்சியம்மன் கோயிலருகில் சிதம்பரப் பொய்கை என்ற ஊருணி உள்ளது. இதில் சித்தர்கள் வாசம் செய்வதாக கூறப்படுவதால், ஊருணியில் பக்தர்கள் குளிக்கவோ, குடிக்கவோ பயன்படுத்துவதில்லை., இந்த ஊருணிக்கு வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் சென்று வணங்கி செல்கின்றனர்.

The post வெற்றி தரும் பெரிய நாயகி அம்மன் appeared first on Dinakaran.

Tags : Amman ,Karaikudi Velangudi Vayanachi ,Periyanayaki Amman ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்