×

வேதாரண்யம் அருகே மறைந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து பயிரிடும் பொறியாளர் பட்டதாரி பெண்.. குவியும் பாராட்டு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், மறைந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு தனது நிலத்தில் சாகுபடி செய்து வருகிறார். வேதாரண்யத்தை அடுத்துள்ள குரவப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவரஞ்சினி. பொறியியல் பட்டதாரியான இவர், தனது கணவர் உதவியுடன் அசாம், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து அங்கிருந்து பெறப்பட்ட விதைகள் மூலம், 1520 நெல் ரகங்களை தனது வயலில் பயிரிட்டுள்ளார். இலுப்பை பூ சம்பா, கருங்குறுவை, மடுமுழங்கி, வெள்ளக்கொட வாழை, பிரியன், கடற்பாலி என ஒவ்வொரு நெல் ரகத்தையும் தனது 3 ஏக்கர் நிலத்தில், ரகத்திற்கு 40 சதுர அடி என்ற அளவில் பயிரிட்டிருக்கிறார்.

சிவரஞ்சினி பயிரிட்டுள்ள 1500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் தங்க தம்பா, சொர்ண முகி, சொர்ண மல்லி, வாடன்சம்பா, புழுதிகார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட நெல் ரகங்கள் மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்கள் உடையவை என கூறப்படுகிறது. மறைந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை தேடி தேடி கண்டறிந்து பயிரிட்டுள்ள சிவரஞ்சினியின் வயலை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையிட்டு, சாகுபடி முறைகள் குறித்தும் கள பயிற்சி பெறுகின்றனர். பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாக கூறும் சிவரஞ்சினி, வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்துபோன நெல் ரகங்களை மீட்பேன் என்று கூறுகிறார். சிவரஞ்சினியின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

The post வேதாரண்யம் அருகே மறைந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து பயிரிடும் பொறியாளர் பட்டதாரி பெண்.. குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Nagai district ,Sivaranjini ,Kuravapulam ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு