×

உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் சாதனை: ஆண்டுக்கு 6 லட்சம் டன்; ரூ.70 கோடி வருவாய்

வேதாரண்யம்: ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து ரூ.70 கோடி வருவாய் ஈட்டி, 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வேதாரண்யம் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்தி தொழிலில் மொத்தமாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மழைக்காலம் முடிந்து ஜனவரி மாதத்தில் துவங்கப்படும் உப்பு உற்பத்தி, செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். இந்த ஒன்பது மாத காலத்தில் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்து வேதாரண்யம் உப்பளங்கள் சாதனை படைத்து வருகிறது.

வேதாரண்யத்தில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்ற 6 லட்சம் டன் உப்பு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. வழக்கமாக 20 ஆண்டுகளுக்கு முன் ரயில், லாரிகள் மூலம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியம்பள்ளி வரை அகல ரயில் பாதை திட்டம் துவங்கப்பட்டதால், டெமோ ரயில் நிறுத்தப்பட்டதால் லாரிகள் மூலமே உப்பு ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இதற்கு முன் அகஸ்தியன் பள்ளியில் இருந்து ரயில்கள் மூலம் குறைந்த செலவில் அதிக அளவில் உப்பு மூட்டைகள் அனுப்பப்பட்டதால் ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அகல ரயில்வே பணிகளால் லாரிகள் மூலமாக மட்டுமே உப்பு ஏற்றுமதி நடை பெறுவதால் போக்குவரத்து செலவு அதிகமானது. இதனால் உப்பு விலை உயர்ந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்பு ஏற்றுமதி பின்னடைவு ஏற்பட்டது.

தற்போது, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியம்பள்ளி வரை அகல ரயில் பாதை திட்டம் நிறைவடைந்து ரயில் ஓட துவங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி துவங்கிய நிலையில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பருவம் தப்பி பெய்த மழையால் உப்பு உற்பத்தி சிறிது தடைபட்டது. தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தியை முழுவீச்சில் உற்பத்தியாளர்கள் துவங்கி உள்ளனர். இரவு, பகலாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் உப்பளத்தில் வேலை செய்கின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறுவதால் சுமார் ரூ.70 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்தாண்டு உப்பு உற்பத்தி துவக்கத்தில் பருவம் தப்பிய மழையால் இரண்டு மாதம் பாதித்த நிலையில் இலக்கை எட்ட உப்பள பகுதிகளில் தொழிலாளர்கள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு உற்பத்தி களைகட்டி வருவதால் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது என்று வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

* சரக்கு ரயில் மூலம் ஏற்றுமதி நடைபெறுமா?

வேதாரண்யத்தில் உள்ள ஒரு உப்பு உற்பத்தி நிறுவனத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகூர் ரயில் நிலையத்திலிருந்து 54 வேகன்களை கொண்ட சரக்கு ரயில் மூலம் 3,600 டன் உப்பை ஆந்திர மாநிலத்தில் உள்ள வேல்துருத்தி என்ற பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே வேகன் மூலம் நடைபெற்ற உப்பு ஏற்றுமதி இதுவாகும். அகஸ்தியன் பள்ளி ரயில்பாதை செயல்பட்ட காலத்தில் இங்கிருந்து ஒரு மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை சரக்கு ரயில் மூலம் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் அதிகளவில் பயன்பெற்றனர். தற்போது அகல ரயில்பாதை முடிந்த நிலையில் அகஸ்தியன் பள்ளியில் இருந்து தொடர்ந்து ரயில்வே வேகன் மூலம் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டால் ரயில்வே துறைக்கும் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சரக்கு ரயில் மூலம் உப்பு ஏற்றுமதி நடைபெற இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் மூலம் உப்பு ஏற்றுமதி செய்தால் விரைவில் பயனாளர்களுக்கு உப்பு சேதமின்றி சென்று சேர்வதால் கூடுதல் விலை கிடைக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

* 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் சாதனை படைத்து வருவதுடன் இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மூலப்பொருளாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த உப்பை வாங்கும் தனியார் நிறுவனங்கள், சுத்திகரிப்பு செய்து பல்வேறு வகைகளில், பல்வேறு வடிவங்களில் தயார் செய்த உப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். இந்த வகை உப்புகளை பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபார நிறுவனங்கள் அதிகளவில் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதற்கு உப்பளங்களில் ஆண், பெண் தொழிலாளர்கள் காலில் காலணி கூட அணியாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே காரணமாகும்.

The post உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் சாதனை: ஆண்டுக்கு 6 லட்சம் டன்; ரூ.70 கோடி வருவாய் appeared first on Dinakaran.

Tags : Vedaranagam ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!