×

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டபேரவையில் வேல்முருகன் அதிமுக இடையே காரசார விவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவித்துள்ள ஆணையத்தின் பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க தேவையில்லை. ஒரு மாதம் நீட்டித்தாலே போதும் என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் இருந்தபோது இட ஒதுக்கீடு தந்தார் என்று பெருமையாக கூறினார். இப்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு எந்த சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இது முறையான அமல்படுத்தப்படுமா என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சமயத்தில் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதனால் தான் நீதிமன்ற தடை வந்து விட்டது. அதையும் மீறி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நாங்கள் முயற்சி செய்தோம். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று பாராமல் உடனடியாக அமல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்றோம். அதற்காக ஜி.கே.மணி கூட நேரில் என்னை சந்தித்து திமுக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாக பாராட்டினார். உச்ச நீதிமன்றம் தடை செய்தபோது சில வழிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆணையத்தின் விருப்பத்தின் படிதான் இப்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஜி.கே.மணி: முதல்வர் 10.5 சதவீத இடஓதுக்கீட்டை செயல்படுத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. டாக்டர் ராமதாஸ் ஒரு நாள் கூட முதல்வருக்கு எதிராக பதிவிட்டதில்லை. முதல்வரை பாராட்டியே வருகிறார்.
அவை முன்னவர் துரைமுருகன்: சமூக நீதியை காப்பதில் அனைத்து கட்சிக்கும் பங்கு உண்டு. ஆணையம் 4 மாதத்திலே அறிக்கை தந்தால் உங்களை விட முதல்வர் மகிழ்ச்சியடைவார்.
வேல்முருகன்: ஒட்டுமொத்த வன்னியர்களும் திமுக பக்கமே இருக்கிறார்கள். (இந்த பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது).
கே.பி.முனுசாமி(அதிமுக): வன்னியர் இட ஒதுக்கீடு உணர்வுப்பூர்வமான பிரச்னை என்பதால் பொறுமையாக கையாள வேண்டும். முதல்வரும், துரைமுருகனும் அழகாக விளக்கமளித்துள்ளனர். அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் வேல்முருகன் கூறிய கருத்துக்களை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: வேளாண் துறை அமைச்சர் பேசிய கருத்துக்கள் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் வேல்முருகன் யாரையும் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை.
செல்வபெருந்தகை (காங்கிரஸ்): ராமதாஸ், கருணாநிதியை சந்தித்து இட ஒதுக்கீட்டின் கதாநாயகன் என கூறி மகாராஜா இருக்கையை வழங்கினார்.
எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): இட ஒதுக்கீடு என்று சொன்னால் அதனை ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதி தான். இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு 20% இருப்பது நல்லதா அல்லது 10.5% உள் ஒதுக்கீடு இருப்பது வன்னியர்களுக்கு நல்லதா.
கே.பி.முனுசாமி (அதிமுக): “ஜெயலலிதா தான் 69 சதவித இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தார்.

The post வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டபேரவையில் வேல்முருகன் அதிமுக இடையே காரசார விவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Velmurugan ,AIADMK ,Assembly ,Chief Minister ,M.K.Stal ,BAM ,Party ,GK Mani ,
× RELATED குரங்கு பெடல் விமர்சனம்