- திருச்செந்தூர்
- வைகாசி விசாகத் திருவிழா
- வைகாசி விசாகாதி விழா
- திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோயில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று(2ம் தேதி) வைகாசி விசாகத்திருவிழா நடந்தது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, ஆண்டுதோறும் வசந்த திருவிழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான வசந்த திருவிழா, கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 9ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
10ம் திருநாளான இன்று (2ம் தேதி) வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முற்பகல் 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதன் பிறகு மாலை 4 மணி அளவில் வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்கிறார். இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.நாளை (சனி) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.
The post திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.