×

டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: பிரதமர் மோடியுடன் இன்றிரவு பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவுதி, தென்கொரியா, மெக்ஸிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி-20 தலைமைப் பொறுப்பை கடந்தாண்டு நவம்பரில் இந்தியா ஏற்றுக் கொண்டது. இதன்படி கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 தொடர்பான மாநாடுகள் நடைபெற்றன.

இறுதியாக ஜி-20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு தலைநகர் டெல்லியின் பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பாரத் மண்டபம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இம்மாநாடு நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதால், ெடல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜி-20 உறுப்பு நாடுகள், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவிகிதத்துக்கு மேலும் ஆதிக்கம் செலுத்தி வருவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதிதுவப்படுத்துகின்றன. இதுபோன்ற சிறப்புகொண்ட ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இம்மாநாட்டில் பருவநிலை மாற்றம், நிலையான எரிசக்தி, சர்வதேசக் கடன், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது, சர்வதேச கடன் கட்டமைப்புச் சீர்திருத்தம், கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாடுகள், அரசியலில் நிச்சயமற்ற தாக்கம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சீனப் பிரதமர் லீ கியாங், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், நைஜீரியா, அர்ஜென்டினா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா போன்ற 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

உச்சி மாநாட்டுக்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்கு, மத்திய டெல்லி, ஏரோசிட்டி, குருகிராம் உட்பட அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலுள்ள ஓட்டல்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் பிரதிநிதிகள் தான் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வருகிறார். அவருடன் அவரது மனைவி ஜில் பிடனும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் இம்மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.

அவரை எஃகு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார். இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டெல்லி வந்தனர். டெல்லி வந்து சேர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு இந்தியா சார்பில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றிரவு அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், பிரதமர் மோடியும் ‘ஜிஇ ஜெட்’ இன்ஜின் ஒப்பந்தம், சிவில் அணுசக்தி தொழில்நுட்பம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இன்றைய நிகழ்ச்சி நிரல்களின்படி மொரீஷியஸ், வங்கதேசம், அமெரிக்கா தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

The post டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: பிரதமர் மோடியுடன் இன்றிரவு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Delhi ,US President ,Joe Bidden ,Modi ,Joe Biden ,India ,G20 ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!