×

‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஜாமீனில் விடுதலை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிளை ஜாமீனில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் மோடி பீகார் சென்ற போது கலவரத்தை தூண்ட முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஜலாலுதீன் கானை ‘உபா’ சட்டத்தின் கீழ் புல்வாரிஷரீப் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) உறுப்பினர்களுக்கு தனது வீட்டின் மேல் தளத்தை வாடகைக்கு விட்டதாக ஜலாலுதீன் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதம் மற்றும் வன்முறைச் செயல்களை தூண்டும் வகையில் குற்றச் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஜலாலுதீன் கான் தரப்பில் கீழமை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் ஜாமீனுக்கு விண்ணப்பித்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘நீதிமன்றங்கள் குறிப்பிட்ட வழக்குகளில் ஜாமீன் வழங்க மறுக்கத் தொடங்கினால், அது சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்படும்போது, ​​​அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் நீதிமன்றம் தயக்கம் காட்டக்கூடாது. அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கலாம்; ஆனால் அதனை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

ஜாமீன் என்பது விதி மற்றும் சிறை விதிவிலக்காகும். இந்த விதிகள் உபா போன்ற சிறப்பு சட்டங்களுக்கும் பொருந்தும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜலாலுதீன் கான், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவோ அல்லது செயல்பட்டதாகவோ குற்றப்பத்திரிகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இணை குற்றவாளிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அத்தகைய செயல்களில் ஈடுபட உள்ளனர் என்று கருதினால் கூட, ஜலாலுதீன் கான் சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

The post ‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஜாமீனில் விடுதலை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Modi ,Bihar ,Dinakaran ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...