×

ஒன்றிய அரசு போதிய முன்னெச்சரிக்கை தரவில்லை அமித்ஷா பொய் சொல்கிறார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்: நிலச்சரிவு குறித்தோ, அதிக மழை குறித்தோ ஒன்றிய அரசு போதிய முன்னெச்சரிக்கை தரவில்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை கூறுகிறார் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவுக்கு மழை எச்சரிக்கை சரியான நேரத்தில் விடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் கேரளா என்ன செய்து கொண்டிருந்தது என்றும் மேலவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான தகவல் ஆகும். கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டிருந்தது.

நிலச்சரிவு ஏற்பட்ட அன்று காலை 6 மணிக்குத் தான் சிவப்பு எச்சரிக்கை தரப்பட்டது. ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 24 மணி நேரத்தில் 115 முதல் 204 மிமீ மழை தான் பெய்ய வேண்டும். ஆனால் 48 மணி நேரத்தில் 512 மிமீ மழை பெய்தது. நிலச்சரிவு குறித்து தகவல் தரும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையும் எந்த எச்சரிக்கையும் தரவில்லை. அவர்கள் பச்சை எச்சரிக்கை மட்டுமே அறிவித்திருந்தனர். எனவே பேரழிவு நடந்துள்ள இந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் கூறுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. மீட்புப் பணிகளுக்குத் தான் முதல் முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசு போதிய முன்னெச்சரிக்கை தரவில்லை அமித்ஷா பொய் சொல்கிறார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union government ,Amit Shah ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Home Minister ,Chief Minister Pinarayi ,Dinakaran ,
× RELATED நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை...